கவுகாத்தி: ”நான் பந்துவீச்சாளர்களை பார்ப்பது இல்லை. பந்தை மட்டும் பார்த்து விளாசுகிறேன்,” என வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
இந்தியாவின் 15 வயது ‘பேட்டிங் புயல்’ வைபவ் சூர்யவன்ஷி. கிரிக்கெட் லீக் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ரன் மழை பொழிகிறார். உலகின் முன்னணி பவுலரான பும்ரா (மும்பை) வீசிய முதல் பந்தை சிக்சருக்கு அசத்தினார். நேற்று முன் தினம் பெங்களூருவின் ஹேசல்வுட் (ஆஸி.,) வீசிய முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் வைபவ். இந்த ஓவரில் 4, 4, 4, 6 என மொத்தம் 18 ரன் விளாசினார். 4 போட்டியில் 18 சிக்சர், 18 பவுண்டரி உட்பட 200 ரன் விளாசியுள்ளார்.
வைபவ் கூறியது: பொதுவாக பயிற்சியில் விளையாடுவது போல, போட்டி நேரத்திலும் செயல்படுகிறேன். கூடுதலாக எவ்வித ‘ரிஸ்க்கும்’ எடுப்பதில்லை. யார் பந்து வீசுகின்றனர் என்ற எண்ணம் மனதிற்குள் வந்து செல்லும். எனினும் யார் பவுலர் என்று பார்ப்பது இல்லை. பந்து எப்படி வருகிறது என்பதை மட்டும் கவனித்து விளாச முயற்சிப்பேன்.
இது நீண்ட தொடர் என்பதால், போட்டியில் மட்டும் கவனம் செலுத்த எனது தந்தை சஞ்ஜிவ் ‘அட்வைஸ்’ செய்துள்ளார்.
ஒவ்வொரு முறை அவுட்டாகும் போதும் ‘அப்செட்’ ஆகிறேன். கூடுதலாக 20 ரன் எடுத்திருந்தால் அணிக்கு உதவியாக இருந்திருக்கும் அல்லது இன்னும் சில ஓவர்கள் முன்னதாகவே போட்டியை ‘பினிஷிங்’ செய்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.
‘ரிமோட்’ கார் ஆர்வம்
கவுகாத்தி போட்டிக்கு முன் மைதானத்தில் இருந்த ‘ரிமோட் கன்ட்ரோல்’ மூலம் சிறிய காரை ஓட்டி விளையாடினார் வைபவ். அருகில் இருந்த ஒருவர், ‘உன்னிடம் ‘லைசென்ஸ்’ இல்லை,’ என காமெடியாக தெரிவித்தார்.
கோலி நெகிழ்ச்சி
கவுகாத்தி போட்டியில் ராஜஸ்தான் அணி, பெங்களூருவை வென்றது. பின் பெங்களூரு அணியின் கோலி, வைபவ் தொப்பியில் ‘ஆட்டோகிராப்’ வழங்கினார். இதில்,’ டியர் வைபவ், வெல்டன்,’ என பாராட்டி இருந்தார்.
