– நமது நிருபர் – தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், தி.மு.க.,விற்கென்று உளவு துறையால் எந்த வேலையும் செய்து

– நமது நிருபர் –

தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், தி.மு.க.,விற்கென்று உளவு துறையால் எந்த வேலையும் செய்து கொடுக்க முடியாது. இருப்பினும், உளவு துறையில் உள்ள தி.மு.க., அபிமான அதிகாரிகள் வாயிலாக தென் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில், மார்ச் கடைசி வாரம் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள், தொகுதிகள் பெயர் பட்டியல் மட்டும் உள்ள ஒரு தாளில் கொடுக்கப்பட்டது. வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள தொகுதிகளின் அருகே சிவப்பு புள்ளி வைக்கப்பட்டு இருந்தது.

புள்ளி வைக்கப்பட்ட தொகுதிகளில், தி.மு.க.,வின் தேர்தல் வியூக அமைப்பான ‘பென்’ நிறுவனம், ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. அதில், உளவு துறையின் தகவல் ஊர்ஜிதம் செய்யப்பட்டது.

நேரத்தை வீணடிக்காமல், களத்தில் சபரீசனை இறக்கிவிட்டது. சபரீசனை களத்தில் இறக்குவது அரிது. விஷயம் ‘சீரியஸ்’ என்றால் தான் களத்தில் இறக்கப்படுவார். கடைசியாக 2023ல், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், கூட்டணி கட்சியான காங்கிரசை சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வெல்ல வைக்க, முதலியார் ஓட்டுகளை திரட்டுவதற்காக பணியாற்றினார்.

அதிக செல்வாக்கு

சபரீசன் மட்டுமல்லாது, அவரின் நெருங்கிய நண்பர், லண்டன் வெங்கட் மற்றும் ‘பென்’ நிறுவனத்தின் இயக்குநர் மணிகண்டனும் உடன் சென்றனர். எப்போதும் பின்புலத்தில் இருந்து செயல்படும் மணிகண்டன், மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் மத்தியில் அறிமுகமானதும், அவர்களிடம் வியூகம் பற்றி பேசியதும் இதுவே முதல் முறை என, தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.

கடந்த 6ம் தேதி , நெல்லை- வண்ணாரப்பேட்டையில், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் வேட்பாளர்களையும், அந்த தொகுதிகள் சார்ந்த தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளையும், சபரீசன் சந்தித்தார்.

திருநெல்வேலி தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக அக்கட்சியின் மாவட்ட செயலர் தச்சை கணேசராஜா, த.வெ.க., சார்பில் ஆர்.எஸ்.முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவரும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதிலும்,ஆர்.எஸ்.முருகன் அதிக செல்வாக்கு உடையவர், நிறைய செலவுசெய்யக் கூடியவர்.

எனவே, ‘அந்த சமூக ஓட்டுகள் நமக்கு வருவது கடினம். தேர்தல் செலவுகளையும், அவ்விருவரும் அதிகமாக செய்ய வாய்ப்பு உள்ளது. இதர சமூக ஓட்டுகளை நாம் முழுமையாக பெற்றால் தான் வெற்றிபெற முடியும். நெல்லை மாநகராட்சியில், தி.மு.க., மேயர் சரவணனால் ஏற்பட்ட குளறுபடியால், 13 வார்டுகள் நமக்கு எதிராக உள்ளன. இப்பிரச்னைகளை சரிசெய்ய, நாம் கூடுதல் செலவு செய்தாக வேண்டும்’ என்று சபரீசன் பேசியதாக கூறப்படுகிறது.

அம்பாசமுத்திரம் தொகுதியில், நாடார் ஓட்டுகள் சரிபாதியாக இருந்தாலும், அந்த சமூக வேட்பாளர்கள் வெற்றி பெற்று, பல தேர்தல்கள் ஆகிவிட்டன. அங்கு, தி.மு.க., கூட்டணி சார்பில், நாடார் சமூகத்தைச் சேர்ந்த வி.பி.துரை, காங்கிரஸ் வேட்பாளர்.

சபரீசன் ஆலோசனை

அ.தி.மு.க., வேட்பாளர் இசக்கி சுப்பையா, முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர், ‘அவர் வெற்றி பெற, எந்த எல்லைக்கும் சென்று செலவு செய்வார். கிராமங்கள் நமக்கு சாதகமாக இருந்தாலும், வீரவநல்லுார், சேரன்மகாதேவி உள்ளிட்ட பேரூராட்சிகள் தி.மு.க., கூட்டணிக்கு சாதகமாக இல்லை. அம்பையில் தேவேந்திர குல வேளாளர் சமூக ஓட்டுகளுக்கு செலவு செய்து தான், தொகுதியை நமக்கு சாதகமாக்க முடியும்’ என, சபரீசன் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து அன்றைய தினமே, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்துக்கு சென்று ஆலோசனை நடத்தினார். அந்த தொகுதிக்கு உட்பட்ட கீழப்பாவூர் ஒன்றியம், தி.மு.க.,வுக்கு சாதகமாக இல்லை என்று அறிந்து, அங்கு நேரில் சென்று நிர்வாகிகளிடம் பேசினார்.

மேலும், குற்றாலம், வலசை, மத்தளம்பாறை, கீழப்பாவூரில் உள்ள அ.தி.மு.க., நிர்வாகிகளில், தி.மு.க., பக்கம் யார் வருவர், அவர்களை வசப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று பட்டியல் தயாரித்து அனுப்பும்படி உத்தரவிட்டார்.

தொடர்ந்து, 7ம் தேதி , நாகர்கோவில் தி.மு.க., அலுவலகத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தி.மு.க., போட்டியிடும் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் தொகுதி நிர்வாகிகளிடம் சபரீசன் ஆலோசனை நடத்தினார்.

அங்கு பேசிய அவர், ‘இந்த மாவட்டத்தில், மூன்று தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்கியதால், நம் கட்சியினர் கோபமாக இருக்கலாம். ஆனால், நம்மை விட காங்., இங்கு பலமாக இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த தேர்தலில், கன்னியாகுமரி

தொடர்ச்சி ௭ம் பக்கம்

மாவட்டத்தில் நாம் போட்டியிடும் இரு தொகுதிகளில் வெற்றி கிடைத்தால், அடுத்த தேர்தலில், அதிக தொகுதிகளில் நிற்க நானே ஏற்பாடு செய்கிறேன்’ என உறுதி அளித்தார்.

அங்கிருந்து மீண்டும் திருநெல்வேலிக்கு வந்த சபரீசன், கட்டுமான நிறுவன அதிபர்கள் உள்ளிட்ட தொழில் பிரபலங்களையும் தன் வீட்டுக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார்.

அதையடுத்து, 8ம் தேதி , துாத்துக்குடி எட்டயபுரத்தில் முகாமிட்ட சபரீசன், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், துாத்துக்குடி ஆகிய தொகுதி வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார்.

அப்போது, ‘விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு, தொகுதிக்குள் பாதிப்பை ஏற்படுத்துவதாக தகவல் வருகிறது. அதை முன்பே சரிசெய்திருக்க வேண்டும். அடுத்த சில நாட்களிலாவது சரிசெய்யுங்கள்’ என கூறினார்.

அதோடு, ‘கோவில்பட்டி ரொம்பவே மோசமாக உள்ளது. கடம்பூர் ராஜுவுக்கு சாதகமாக நம் கட்சி ஆட்களே வேலை செய்கின்றனர். உங்களுக்கு என்ன தேவையோ, அதை எங்களிடம் கேளுங்கள்; செய்து கொடுக்கிறோம். இந்த தேர்தலில் வெற்றியை தேடித்தரும் ஒன்றிய செயலர்களுக்கு, பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது’ என்று உற்சாகப்படுத்தினார்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில், துாத்துக்குடி தாலுகாவின் ஒரு பகுதியும், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவின் ஒரு பகுதியும் உள்ளன. அவற்றில், ஸ்ரீவைகுண்டம் பகுதி மிகவும் பலவீனமாக உள்ளதை சுட்டிக்காட்டி, அதை சாதகமாக்க கூடுதலாக செலவு செய்ய உத்தரவிட்டார்.

பின், அங்கிருந்து பரமக்குடி சென்று, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார். ‘பன்னீர்செல்வம் வருகைக்கு பின், இங்கு நாம் பலமாகி உள்ளோம். ஆனாலும், சிவகங்கை, திருவாடானை தொகுதிகள் ரொம்பவே வலுவில்லாமல் உள்ளன. இதில், சிவகங்கையை நம்மால் பல ஆண்டுகளாக கைப்பற்ற முடியவில்லை.

‘இம்முறை உதயசூரியன் சின்னத்தில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் கருணாஸ் போட்டியிடுவதால், நன்றாக வேலை பாருங்கள்’ என உத்தரவிட்டார். அதோடு, நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதி நிலவரத்தை கேட்டு அறிந்தார்.

அடுத்த நாளான, 9ம் தேதி, மதுரைக்கு சென்றார். திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதி நிர்வாகிகளை சந்தித்து, ‘மதுரையில் இவ்விரு தொகுதிகள் தான் ரொம்பவே பலவீனமாக உள்ளன. அடுத்து வரும் 12 நாட்களும் கடுமையாக உழைத்தால் தான் வெற்றி கிடைக்கும்’ என எச்சரித்துவிட்டு, அன்று மதியம் சென்னை திரும்பிவிட்டார்.

பலவீனமாக உள்ள இந்த அனைத்து தொகுதிகளிலும் தாராளமாக செலவு செய்ய தி.மு.க., முடிவு செய்துள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் எவ்வளவு செலவானாலும் வென்றே ஆக வேண்டும் என்று தி.மு.க., துடிப்பாக இருக்கிறது.

இதன் விளைவாக தான், ஒரு சில தொகுதிகளை கவனிக்க, திருநெல்வேலி -அன்பு நகரில் உள்ள, பிரபல கட்டுமான நிறுவன அதிபர் ஒருவரிடம் பேசப்பட்டது. இந்த தகவல் கசிந்து தான், அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில், 200 கோடி ரூபாய் பணம் இருப்பதாக, கடந்த 8ம் தேதி, தேர்தல் பறக்கும் படை சோதனை செய்தது. ஆனால், பணம் எதுவும் சிக்கவில்லை.

தென் மாவட்டங்களில், குறிப்பாக துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரியில் வென்றே ஆக வேண்டும் என்ற துடிப்போடு தி.மு.க., தீயாய் வேலை செய்கிறது. அங்கு விஜய் பிரசாரத்திற்கு பின், முன்பு திட்டமிட்டதை விட பல மடங்கு செலவு அதிகமானாலும் பரவாயில்லை என, தலைமை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் வேலையை ஒப்பிடுகையில், மற்ற கட்சிகள் துாங்கிக் கொண்டு இருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும்.

‘தென்காசி, கடையநல்லுார் அத்தியாவசியம்’

தென் மாவட்டங்களில் தி.மு.க., இவ்வளவு தீவிரமாக இருப்பதற்கு, தேர்தல் வெற்றியை தாண்டி முக்கியமான காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த மாவட்டங்களில் தான், அதிக மணல் மற்றும் கல் கொள்ளை நடக்கிறது. இது தொடர்பான குற்றச்சாட்டு, அமைச்சர் மனோ தங்கராஜ் மீதும் வைக்கப்பட்டது. இந்த பகுதிகளில் இருந்து, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்கள் வழியாக எண்ணற்ற லாரிகளில், மண்ணும் கல்லும் கேரளாவிற்கு செல்கின்றன. ‘மற்ற தொகுதிகளைவிட கேரள எல்லையான தென்காசி, கடையநல்லுார் தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்’ என, அம்மாவட்ட நிர்வாகிகளுக்கு, தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளதாக தொகுதி நிர்வாகிகள் சிலர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த சில தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் கூறியதாவது: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தென்காசி மாவட்டத்தில், தென்காசி, ஆலங்குளம், கடையநல்லுார், வாசுதேவநல்லுார், சங்கரன்கோவில் ஆகிய ஐந்து தொகுதிகள் உள்ளன. ஆலங்குளம், தென்காசி, கடையநல்லுார் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தான் அதிகப்படியான கல் குவாரிகள் உள்ளன. பெரும்பாலும் அனுமதி இல்லாத குவாரிகள் தான். இங்கு உடைக்கப்படும் கற்கள், தென்காசி – புளியரை செக்போஸ்ட் வழியாகவும், கடையநல்லுாரில் மலைப்பாதை வழியாகவும், கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன. இதற்கான மறைமுக வரியை, அம்மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளும், தி.மு.க.,வினரும் பங்கிட்டு கொள்கின்றனர். உயர்மட்டம் வரை பங்கு செல்கிறது. தென்காசி மாவட்டத்தில் அளவுக்கு மீறி நடக்கும் கனிமவள கடத்தலுக்கு எதிராக, அ.தி.மு.க., – நா.த.க., கட்சியினர் கடுமையாக போராடி வருகின்றனர். கடந்த தேர்தலில், தென்காசி தொகுதியில், வெறும் 374 ஓட்டு வித்தியாசத்தில்தான், அ.தி.மு.க., தோல்வி அடைந்தது. ஆலங்குளம், கடையநல்லுாரில் அ.தி.மு.க., வென்றது. எனவே, இம்முறை அ.தி.மு.க., வெற்றி பெற்றால், கனிம வளங்கள் கேரளாவுக்கு செல்வதற்கு பெரும் தடையாகி விடும் என, தி.மு.க., எண்ணுகிறது. ஆனால், தென்காசி தி.மு.க.,வில் உட்கட்சி பூசல் அதிகமாக இருப்பதால், அந்த தொகுதி சாதகமாக இல்லை. எனவேதான், தி.மு.க., இணை அமைப்பு செயலர் அன்பகம் கலையின் மகனை சென்னையில் இருந்து இறக்குமதி செய்துள்ளனர். அவர் தாராளமாக செலவு செய்வார். அதேபோல், கடையநல்லுார் தொகுதியை சாதகமாக்க, முதல் முறையாக ஹிந்து மறவர் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்த, தலைமை முடிவு செய்தது. இதனால், முஸ்லிம்களிடையே அதிருப்தி கிளம்புவதை தடுக்க, கடையநல்லுார் நகரத்தை இரண்டாக பிரித்து, இரண்டிலும் முஸ்லிம் நிர்வாகிகளை நியமித்தது. கனிமவள திட்டம் எவ்வளவு விமரிசையாக போடப்படுகிறது என்றால், ராதாபுரத்தில் இருந்து வரும் கனிமங்கள் கூட எளிதாக கேரளாவிற்கு போக வேண்டும் என்பதற்காக, முதல் நிலை நகராட்சியான அம்பாசமுத்திரத்திற்கு வெளிவட்ட சாலையே போடப்படுகிறது. கன்னியாகுமரியில் கனிமவள கொள்ளைக்கு எதிராக, எல்லா கட்சியினரும் ஒன்றாக நிற்கின்றனர். இதனால், அவ்வழியாக கேரளாவுக்கு கனிமத்தை கொண்டு செல்ல அவ்வப்போது தடை ஏற்படுகிறது. இதனால், தென்காசி, கடையநல்லுாரை தன்வசப்படுத்த, எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை என உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால், தலைமையின் இந்த பிளான், தென்காசி தி.மு.க., நிர்வாகிகள் பலருக்குமே பிடிக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link