வங்கதேசத்தில் அமைந்துள்ள புதிய அரசு இந்தியாவுடன்  மீண்டும் நட்பு!: அரசியல் பதற்றத்திற்கு பின் இரு தரப்பு உறவில் நெருக்கம்

– நமது சிறப்பு நிருபர் -:

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கு பின், இந்தியா – வங்கதேசம் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. தற்போது அந்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், இரு தரப்பு உறவு சீரான பாதைக்கு திரும்பும் அறிகுறிகள் தென்படுகின்றன. அதை உறுதி செய்யும் வகையில் வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுார் ரஹ்மானின் சமீபத்திய டில்லி பயணம் அமைந்துள்ளது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில், 2024 ஆகஸ்டில், அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா நம் நாட்டு க்கு தப்பி வந்தார்.

தொடர்ந்து, இடைக்கால அரசின் ஆலோசகராக முகமது யூனுஸ் பதவியேற்றார். அவரது தலைமையிலான நிர்வாகம், ஹசீனாவை ஒப்படைக்க கோரிக்கை வைத்தது. ஆனால் அதை நம் நாடு பொருட்படுத்தவில்லை.

பிப்ரவரியில் நடந்த வங்கதேச பொதுத் தேர்தலில் பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சி அமோக வெற்றி பெற்றது. அதன் தலைவரான தாரிக் ரஹ்மான் பிரதமராக பதவியேற்றார். இவர், மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன்.

இவரது தலைமையிலான புதிய அரசு, நம் நாட்டுடனான உறவை மேம்படுத்த விரும்புவ தாக வெளிப்படையாக அறிவித்தது. முகமது யூனுஸ் ஆட்சியில் வங்கதேச சிறுபான்மையினரான ஹிந்துக்கள் குறிவைக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிராக வதந்திகள் பரப்பப்பட்டன.

விலங்குகளை போல அடித்துக் கொல்வது, தீ வைப்பது போன்ற வன்முறைகள் நடந்தன.

முன்னேற்றம்

இந்நிலையில், புதிய அரசில் வெளியுறவு அமைச்சராக உள்ள கலீலுார் ரஹ்மான், அரசு முறை பயணமாக சமீபத்தில் டில்லி வந்து சென்றார். நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்தார்.

இந்த சந்திப்புகளில், இருதரப்பு தொடர்புகளை வலுப்படுத்தும் அம்சங்கள் விரிவாக ஆலோசிக்கப்பட்டன. டீசல் மற்றும் உர வினியோகத்தை அ திகரிக்க வங்கதேசம் கோரிக்கை வைத்தது. 2022 முதல் இந்தியா – வங்கதேசம் இடையே குழாய் வழியாக ஆண்டுக்கு, 1 லட்சம் டன் டீசல் வழங்கப்படுகிறது. இதற்காக, 131 கி.மீ., துார குழாய் வழி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நம் நாட்டில் இருந்து, 200 ரயில் பெட்டிகள் இறக்குமதி செய்வது, விசா தளர்வு, பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற அம்சங்களும் வங்கதேச வெளியுறவு அமைச்சரின் பயணம் மூலம் முன்னேற்றம் கண்டுள்ளன.

இருப்பினும், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியா ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. மேலும், சில முக்கிய பிரச்னைகளும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டன. அதில் ஒன்று, டீஸ்டா நதி நீர் பகிர்வு.

துவக்கம்

இந்தியா – வங்கதேசம் இடையே, 54 நதிகள் பகிரப்படுகிற நிலையில், டீஸ்டா நதி நீர் பகிர்வு நீண்ட காலமாக தீர்வு காணாத பிரச்னையாக இருந்து வருகிறது.இந்த விவகாரத்தில், மேற்கு வங்க அரசின் எதிர்ப்பால் மத்திய அரசு இதுவரை இறுதி முடிவை எடுக்காத நிலை தொடர்கிறது. மேலும், மைண்ட்டு – லெஷ்கா நீர்மின் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு வங்கதேசம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதேபோல், பராக் நதியில் திபைமுக் எனும் அணை திட்டத்துக்கும் கடந்த காலத்தில் வங்கதேசம் எதிர்ப்பு தெரிவித்தது. இவை குறித்தும் பேச்சு நடந்ததாக தகவல் வெளியா கியுள்ளது.

மொத்தத்தில், வங்கதேச வெளியுறவு அமைச்சரின் இந்த பயணம், பதற்றத்திற்கு பின் இருநாட்டு உறவுகள் மீண்டும் நிலைபெறுவதற்கான முக்கிய துவக்கமாக பார்க்கப்படுகிறது.

Source link