அரசு கொள்முதல் செய்த உயர் ரக நெல்லை கள்ளச்சந்தையில் விற்று மோசடி செய்த வழக்கில், அரிசி ஆலை உரிமையாளர்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில், விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் செய்யும் நெல்லை அரவை செய்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதற்காகவும், இந்திய உணவுக் கழகத்திடம் (எப்.சி.ஐ.) ஒப்படைப்பதற்காகவும் தனியார் அரிசி ஆலைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கமாகும்.
அந்த வகையில், கடந்த 2025-26 ஆண்டுக்கான காரிஃப் பருவத்தில் அரசு சார்பில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட உயர்தர சன்ன ரக நெல்லை அரிசி ஆலைகளுக்கு அரசு வழங்கியது. இந்த நெல்லை ஆலை அதிபர்கள் வெளிச்சந்தையில் (கள்ளச்சந்தையில்) அதிக விலைக்கு விற்றுள்ளனர். அதற்குப் பதிலாக, இந்திய உணவு நிறுவனத்திற்கும், பொது விநியோகத் திட்டத்திற்கும் (ரேஷன்) வெளிமாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட மலிவான, தரம் குறைந்த தடித்த ரக அரிசியை மாற்றி வழங்கியுள்ளனர். இது குறித்தான தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில், நிஜாமாபாத், கரீம்நகர், மற்றும் முலுகு ஆகிய மாவட்டங்களில் உள்ள 16 அரிசி ஆலைகள் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆலைகள் மூலம் சுமார் 3,385 மெட்ரிக் டன் தடித்த ரக அரிசி, சன்ன ரக அரிசிக்குப் பதிலாக மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரசு ஊக்கத்தொகையாக வழங்கிய ரூ.1.69 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த மோசடி சம்பவம் குறித்துத் தெரியவந்ததையடுத்து, தெலுங்கானா சிவில் சப்ளை கார்ப்பரேசன் கடந்த அக்டோபர் 24 அன்று இது சம்பந்தமாகப் புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில், சி.ஐ.டி அதிகாரிகள் 3 குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட 14 ஆலை அதிபர்களையும் கைது செய்துள்ளனர். இதனிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மோசடி சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் குறித்தும் சி.ஐ.டி காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடி விவகாரம் வெளியானதைத் தொடர்ந்து, மேலும் அரவைக்காக ஆலைகளுக்கு அனுப்பப்படவிருந்த 45,414 மெட்ரிக் டன் நெல்லுக்கான ஒதுக்கீட்டை உடனடியாக நிறுத்தினர். இதன் மூலம் அரசுக்கு ஏற்படவிருந்த சுமார் ரூ.242 கோடி அளவிலான பெரும் நிதி இழப்பு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
