சிறு நிறுவனங்களுக்கு பிணையில்லா கடன் 20 லட்சம் ரூபாயாக உயர்த்தியது ஆர்.பி.ஐ.,

* ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 5.25 சதவீதமாகவே தொடர்கிறது

* டிஜிட்டல் மோசடியால் பணத்தை இழந்தால் 25,000 ரூபாய் வரை இழப்பீடு

* பணவீக்க கண்காணிப்பு பட்டியலில் தங்கம், வெள்ளி

மும்பையில், கடந்த 4ம் தேதி துவங்கி, மூன்று நாட்களாக நடைபெற்று வந்த ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டம், நேற்று நிறைவடைந்தது. இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து விவரித்தார்.

இதன் விபரம்:

* ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி; 5.25 சதவீதமாகவே தொடர்கிறது

* அடுத்த நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகளுக்கான ஜி.டி.பி., வளர்ச்சி கணிப்பு உயர்த்தப்பட்டுள்ளது

* இதன்படி, வளர்ச்சி ஜூன் காலாண்டில் 6.90 சதவீதமாகவும்; செப்டம்பர் காலாண்டில் 7 சதவீதமாகவும் இருக்கும்

* இந்த காலகட்டத்தில் பணவீக்கம் 4 சதவீதமாகவும்; 4.20 சதவீதமாகவும் இருக்கும் என மதிப்பீடு

* நடப்பு நிதியாண்டுக்கான பணவீக்க கணிப்பு 2 சதவீதத்திலிருந்து 2.10 சதவீதமாக உயர்த்தப்படுகிறது

* டிஜிட்டல் மோசடிகளில் இருந்து மூத்த குடிமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்

* குறிப்பிட்ட சில வகை வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான கிளை திறக்கும் விதிமுறைகள் எளிமையாக்கப்படும்

* அடுத்த பண கொள்கை குழு கூட்டம், ஏப்ரல் 6 – 8 வரை நடைபெறும்.

எம்.எஸ்.எம்.இ.,

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன் வசதியை மேம்படுத்தும் நோக்கில், பிணையம் இல்லாத கடன் வரம்பை 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘கிசான் கிரெடிட் கார்டு’ திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், அட்டைக்கான காலவரம்பை 5 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக உயர்த்துவது மற்றும் பயிர் பருவங்களை முறைப்படுத்துவது உள்ளிட்ட புதிய மாற்றங்களுக்கான வரைவு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட் துறையின் நிதி ஆதாரத்தை விரிவுபடுத்தும் நோக்கில், ஆர்.இ.ஐ.டி., எனும் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகளுக்கு, வங்கிகள் கடன் வழங்க அனுமதி அளிக்கப்படும் என, ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

இதுவரை, ஐ.என்.வி.ஐ.டி., எனும் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகளுக்கு மட்டுமே, வங்கிகள் கடன் வழங்க முடியும். இந்நிலையில், ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு, போதிய பாதுகாப்பு விதிமுறைகளுடன் ஆர்.இ.ஐ.டி.,க்களுக்கும் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வரைவு வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இழப்பீடு

டிஜிட்டல் பண பரிவர்த்தனை மோசடிகளில் பாதிக்கப்படும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு, அதிகபட்சமாக 25,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் கவனக்குறைவால் ஓ.டி.பி., எண்களை பகிர்ந்திருந்தாலும், மோசடி நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், இந்த நிவாரணம் வழங்கப்படும்.

இந்த இழப்பீடு தொகை, வங்கிகளில் உரிமை கோரப்படாமல் இருக்கும் டிபாசிட்களிலிருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வரைவு வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

நிதி நிறுவனங்கள்

1,000 கோடி ரூபாய்க்கு குறைவான சொத்து மதிப்பு கொண்ட மற்றும் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டாத வங்கி சாரா நிதி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியில் கட்டாயமாக பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவற்றால், நிதித்துறையில் ஏற்படும் அபாயங்கள் மிக குறைவு என்பதால், அவற்றின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் இத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

தரவு நிர்வாகம்

வங்கிச் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில், வங்கி தரவுகளை நிர்வகிக்க, ஒருங்கிணைந்த இணையதளம் ஒன்றை ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த தளம் முன்னுரிமை துறைகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்களை கண்காணிப்பதையும், தரவு நிர்வாகத்தையும் எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம், வெள்ளி

வெங்காயம் மற்றும் தக்காளியை போலவே, தங்கம் மற்றும் வெள்ளியையும் ரிசர்வ் வங்கி தன் பணவீக்க கண்காணிப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. வழக்கமாக வெங்காயம், தக்காளி போன்ற உணவு பொருட்களின் விலையில் திடீர் ஏற்ற இறக்கம் ஏற்படும் என்பதால், அவை இந்த தனி பட்டியலில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.

இப்போது தங்கம் மற்றும் வெள்ளி விலையும் சர்வதேச காரணங்களால் கடுமையாக அதிகரித்துள்ளதால், இந்த சிறப்பு கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

வட்டி விகிதங்கள் நீண்ட காலத்துக்கு குறைவாகவே இருக்கும். வருங்காலத்தில் இது மேலும் குறையவும் வாய்ப்புள்ளது. அதேபோல வங்கி டிபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் வரும் நாட்களில் குறையக்கூடும். உலகளாவிய சூழலில் நிச்சயமற்ற தன்மை நிலவினாலும், இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனுடனான வர்த்தக ஒப்பந்தங்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும். இவை நாட்டின் ஜி.டி.பி., வளர்ச்சிக்கு கூடுதலாக 0.20 சதவீதம் வரை பங்களிப்பை வழங்கக்கூடும். – சஞ்சய் மல்ஹோத்ரா, கவர்னர், ரிசர்வ் வங்கி

Source link