விலைவாசி உயராமல் இருக்க மத்திய அரசு முயற்சி; மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

திருச்சியில் அவர் அளித்த பேட்டி;

ஒரு நாணயத்தின் மதிப்பை கட்டுப்பாட்டுடன், இவ்வளவு வைத்திருக்க வேண்டும் என்ற அந்த காலம் இப்போது இல்லை. தானாக அது தனது இயற்கை நிலையை அடையும். ரிசர்வ் வங்கி மூலமாக என்ன நடக்கிறது என்றால் மேலும் கீழுமாக, நிலையற்றவாறு இருக்க என்ன பண்ண வேண்டுமோ அதற்கான முயற்சியை எடுக்கிறது.

எஸ்ஐஆர் பற்றி சுப்ரீம்கோர்ட் நிறைய விசாரித்திருக்கிறது. நாடு முழுவதும் இருக்கும் புகார்களை விசாரணைக்கு எடுத்திருக்கிறது. அதன் விசாரணையில் நாமும் பங்கெடுத்துக் கொண்டு, நம் தரப்பு வாதங்களையும் முன்வைத்து நீதிமன்றம் மூலம் நியாயம் கேட்பது ஒரு வழிமுறை.

அதையும் செய்யணும், நிறைய பேர் செய்து கொண்டு இருக்கின்றனர். அரசியல் ரீதியாக, எதிர்க்கட்சியாக சாலையில் வந்து போராட்டம் செய்வேன் என்றால் அதையும் செய்யலாம். அதுதான் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது.

கடன் வாங்குவது எப்படி குறைந்தது என்று முன்னாள் நிதியமைச்சர் (தங்கம் தென்னரசுவை குறிப்பிடுகிறார்) கூறுவது, தமிழக சட்டசபையில் விவரமாக விவாதிக்க வேண்டிய முக்கியமான அம்சம். அதை வெளியிலும் பேசிக் கொள்ளலாம், அதனால் ஒன்றுமில்லை.

நிதி அமைச்சராக உள்ள நான், ஒரு மாநிலத்தின் நிதிநிலையை மட்டும் பேசுவது சரியாக இருக்காது. எனவே அதை பற்றி இங்குள்ள எதிர்க்கட்சிகள் சட்டசபையில் பேசுவது நல்லது, மக்களுக்கு அதன் மூலமாக உண்மை நிலவரம் வெளிவரும்.

விலைவாசி உயராமல் இருப்பதற்காகவே ஒரு அமைச்சர்கள் குழு இருக்கின்றனர். 2014ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் விலைவாசி உயராமல் இருப்பதற்காக, பொருட்களின் விநியோகம் தடைபடாமல் இருக்க முயற்சிகள் எடுத்துக் கொண்டு தான் இருக்கின்றனர். இப்பவும் அத்தகைய முயற்சிகளை எடுக்க நாங்கள் தீவிரமாக இருக்கிறோம்.

அப்படித்தான் அரிசி ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டது. விவசாயிகளுக்கு நல்ல அனுகூலமான விலை கிடைக்கக்கூடிய வகையில் தேவையானவற்றை செய்து கொண்டு தான் இருக்கிறோம். விலைவாசி உயர விடமாட்டார்கள், அதற்கான முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது.

இவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Source link