பிரிட்டனின் லண்டன் நகரில் உள்ள பிரபலமான ஆக்ஸ்போர்டு தெருவில், போக்குவரத்துக்கு தடை விதித்து, பாதசாரிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கும் திட்டம் இன்று முதல் (அக்., 26ல்) அமலுக்கு வந்தது.
லண்டனின் முக்கிய வர்த்தகப் பகுதிகளில் ஒன்றான ஆக்ஸ்போர்டு தெருவுக்கு தினமும் உலகளவில் லட்சக்கணக்கானோர் ஷாப்பிங் செய்ய வருகின்றனர். இங்கு வாகனப் போக்குவரத்தால் ஏற்படும் நெரிசலை குறைத்து, பாதசாரிகள் சுதந்திரமாக நடந்து சென்று ஷாப்பிங் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆர்ச்சர்டு தெரு முதல் கிரேட் போர்ட்லேண்ட் தெரு வரையிலான சுமார் ஒரு கி.மீ., துாரப் பகுதியில் பஸ்கள், கார்கள், டாக்சிகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பஸ்கள் மாற்றுப் பாதைகளில் இயக்கப்படுகின்றன. அவசர கால வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். சரக்குகளை இறக்குவதற்கான வாகனங்களுக்கும் குறிப்பிட்ட நேரங்களில் அனுமதி வழங்கப்படும்.
ஆக்ஸ்போர்டு தெருவை மேம்படுத்தும் திட்டத்தின் அடுத்த கட்டமாக, 2027ல் 50க்கும் மேற்பட்ட மரங்கள், 100க்கும் அதிகமான இருக்கைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் ஓய்வெடுப்பதற்கும், பொழுதுபோக்குவதற்கும் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பாதிக்கப்பட்ட வர்த்தகத்தை மீட்டெடுத்து, சுற்றுலாப் பயணிகளையும் வாடிக்கையாளர்களையும் அதிக அளவில் ஈர்ப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.
