கடந்த திமுக ஆட்சியின் போது, தமிழகத்தில் உள்ள 177 தனியார் பள்ளிகளிடம் இருந்து நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தரம் உயர்த்துதல் மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ₹100 கோடிக்கும் மேல் முறைகேடாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. தனியார் பள்ளி சங்கத்தின் தலைவர் டி.சி. இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் மற்றும் முத்துக்குமாருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கின் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்குச் சொந்தமான சென்னை மற்றும் திருச்சி இல்லங்கள் உட்பட 9 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், இது தொடர்பாக அவரிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாகப் போலீஸார் தீவிர விசாரணையும் நடத்தினர். அதனைத் தொடர்ந்து அன்பில் மகேஷை நேரில் அழைத்தும் விசாரணை நடத்தினர். இதனிடையே, இந்த விவகாரம் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக, இந்த ஊழல் புகாரில் சட்டவிரோதமாக நடைபெற்ற பணப்பரிவர்த்தனைகள் தொடர்பாகவும் அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருகின்றன.
இந்த சூழலில் இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வேண்டும் என அன்பில் மகேஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி லட்சுமி நாராயணன் அமர்வில் இன்று (26.10.2026) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது என்று குறிப்பிட்டு அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை அடுத்து, அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இன்று மாலை கைது செய்தனர்.
இதனையடுத்து சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து அன்பில் மகேஸிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்.
தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த அன்பில் மகேஷை கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது. அன்பில் மகேஸ் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது!” எனக் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
