சட்டைநாதர் கோவிலில் ரகசிய வழிபாடு நடந்ததா? திமுக முன்னாள் அமைச்சர்கள் குறித்து பரவும் தகவல்- பின்னணி என்ன? – mayiladuthurai sattainathar temple secret worship kn nehru anbil mahesh social media spreading information

சென்னை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் சிறப்புப் பூஜை நடத்தியும் கூட முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோருக்குப் பாதகமான சட்ட நடவடிக்கைகள் இன்று பாய்ந்துள்ளது அவர்களது ஆதரவாளர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

நகராட்சி நிர்வாக துறை அதிகாரிகள் நியமன முறை கேட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கே.,என் நேரு தாக்கல் செய்த மனு இன்று தலைமை நீதிதி பெஞ்ச்சில் தள்ளுபடி செய்யப்பட்டது. அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தடை இல்லை என்று ஹைகோர்ட் கூறி விட்டது. மறுபக்கம், தற்போது தனியார் பள்ளி அனுமதிகள் வழங்க கோரி பண மோசடி செய்த வழக்கில் அன்பில் மகேஷின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு விட்டார். இந்த சம்பவம் திமுகவிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கே. என். நேரு மற்றும் அன்பில் மகேஷ் கைது நடவடிக்கை

கடந்த தி.மு.க.ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத்துறையில் உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட 2,538 பணியிடங்களை நிரப்பியதில் சுமார் ₹634 கோடி லஞ்சப் பணம் கைமாறியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இது தொடர்பாக ஆதாரங்களுடன் தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் (DVAC) உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 20, 2026 அன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், அதை மறுஆய்வு செய்யக் கோரியும் கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதே போல், திமுக ஆட்சிக்காலத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி (DTCP), சிஎம்டிஏ (CMDA) அனுமதிகள் உள்ளிட்ட சட்டப்பூர்வ ஒப்புதல்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கும் மேல் சட்டவிரோதமாகப் பணம் வசூலித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஊழல் வழக்குகளில் தவெக அரசு அதிரடி

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், அவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சமீபத்தில்தான் கே என் நேரு மற்றும் அன்பின் மகேஷ் பொய்யா மொழி இருவரும் சீர்காழி சட்டநாதர் கோவிலில் இரவுநேர ரகசிய பூஜையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சட்டநாதரை வணங்கியும் கூட அவர் கை விட்டு விட்டாரே என்று ஆதரவாளர்கள் வருத்தப்பட்டு சொல்கிறார்களாம். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு திமுக தலைமை கடும் அதிருப்தியில் இருந்து வந்தது. இந்த சூழலில், மு.க.ஸ்டாலினின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு, இடைத்தேர்தலில் திமுக வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. இப்படியான சூழலில், தவெக அரசு திமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்குகளில் தீவிரம் காட்டி வருகிறது.

சட்டைநாதர் கோவிலில் ரகசிய வழிபாடு நடந்ததா?

கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டைநாதர் கோவிலில் சுக்கிர வார தினத்தை முன்னிட்டு, சட்டைநாதருக்கு வழிபாடு செய்யும் நள்ளிரவு பூஜையில், கலந்துக் கொண்டுள்ளதாக தற்போது அரசியல் வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது. முன்னாள் திமுக அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர் செல்வம்,ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மற்றும் திமுகவைச் சேர்ந்த சில தலைவர்கள் இந்த வழக்குகளிலிருந்து தடையின்றி வெளியே வர வேண்டும் என்பதற்காக ரகசிய வழிபாடுகள் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த கோவிலில் நள்ளிரவில் நடத்தப்படும் பூஜையின் சிறப்பு என்னவென்றால் ஆண்கள் சட்டை அணியாமல் கலந்து கொண்டால் சட்ட சிக்கலில் இருந்து விடுவிக்கப்படுவோம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் திருப்பதி சென்ற திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு 40 லட்சத்தை காணிக்கையாக செலுத்தியிருந்தார். இது அரசியல், வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தான் செலுத்தவில்லை என்று அவரது தரப்பு விளக்கியிருந்தது.
சமீபத்தில் கே.என். நேருவும், அன்பில் மகேஷும் சமீபத்தில்தான் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இணைந்து வந்து தரிசனம் செய்து விட்டுச் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கு முன்பே திமுகவுக்கு நெருக்கடி

இவர் உதயநிதியின் நெருங்கிய நண்பர். அவருக்கு வலது கையை போல் இருந்து வந்தவர். இந்த நிலையில் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்பில் மகேஷ் நிறுத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகி வந்தது. இதனால் அன்பில் மகேஷை எப்படியாவது வெற்றி பெற வைத்து, மீண்டும் சட்டசபைக்கு அனுப்ப வேண்டும் என திமுக தீவிரமாக முயற்சி செய்து வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளது திமுக.,விற்கு நெருக்கடியாக அமைந்துள்ளது. அன்பில் மகேஷைத் தொடர்ந்து தற்போது கே.என்.நேரு எந்த நேரத்திலும் வழக்கு விசாரணைக்காக கைதுசெய்யப்படலாம் என்ற பரபரப்பும் தற்போது நிலவுகிறது.

Source link