முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரைச் சந்திப்பதற்காகச் சென்ற வழக்கறிஞர் தமிழன் பிரசன்னாவுக்கும் காவல்துறையினருக்கும் இடையே சென்னை காவல் ஆணையர் அலுவலக நுழைவுவாயிலில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இதனையடுத்து அவரைச் சந்திப்பதற்காக வந்த வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா உள்ளிட்டோரை காவல்துறையினர் நுழைவுவாயில் தடுப்பு அருகே தடுத்து நிறுத்தினர்.
தன்னை உள்ளே அனுமதிக்க மறுத்த காவல்துறையினரிடம் ஆவேசமாகப் பேசிய வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, “நான் ஒரு பிராக்டிசிங் அட்வகேட், என்னை உள்ளே செல்லக் கூட விடமாட்டீர்களா? இது ஜனநாயக நாடு, வழக்கறிஞர்களை அனுமதிக்க முடியாது என்று காவல்துறை எவ்வாறு கூற முடியும்? யாருடைய அழுத்தத்தின் கீழ் அல்லது உத்தரவின் பேரில் இப்படித் தடுத்துள்ளீர்கள்?” என கேள்வி எழுப்பி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வழக்கறிஞர்களைக் கூட உள்ளே அனுமதிக்காமல் காவல்துறை தடுத்தது குறித்து அவர் கேள்வி எழுப்பியதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
வழக்கின் பின்னணி என்ன?
கடந்த 2021 முதல் 2026 வரையிலான தி.மு.க. ஆட்சியின்போது, தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தரம் உயர்த்துதல் மற்றும் நகர ஊரமைப்பு இயக்குநரகம் (டிடிசிபி), சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) உள்ளிட்ட இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாகத் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையின் மையப்புள்ளியாகப் பதிவு செய்யப்படாத ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற அமைப்பின் பெயரில் செயல்பட்டு வந்த பி.டி. அரசகுமார் என்பவர் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் அளித்தார். அரசியல் மற்றும் அரசு அதிகாரிகளுடனான தொடர்பைப் பயன்படுத்தி இவர் கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததாகப் போலீஸார் தெரிவித்தனர். இவ்வழக்கு தொடர்பாக இதுவரை 177 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
அரசகுமார் தொடர்பான விசாரணையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் பெயர் இந்த வழக்கில் இணைக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி அன்பில் மகேஷுக்கு சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையும் நடத்தினர். அப்போது, “மடியில் கனமில்லை” என்று அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க அன்பில் மகேஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள் அதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த சில மணி நேரங்களிலேயே, சென்னை அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த அன்பில் மகேஷை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர், சிரித்துக்கொண்டே காரில் ஏறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்குள்ள 2-வது தளத்தில் அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
