வாக்குத்திருட்டு மற்றும் தேர்தல் முறைகேடுகளைக் கண்டித்து ’இந்தியா’ கூட்டணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் நவம்பர் 1, அன்று நடைபெற உள்ள இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள, நாட்டு மக்களுக்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறும் ’வாக்குகளைக் காப்போம் – தேசத்தைக் காப்போம்’ என்ற பேரணியில் கலந்து கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகம் மற்றும் தொழில் சபை அமைப்பு ராகுல்காந்திக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதில், தீபாவளி பண்டிகையின் உச்சகட்ட வியாபார சமயத்தில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் ரூ.10,000 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும். எனவே, ஆர்ப்பாட்டத்தை நவ.10-ம் தேதிக்குப் பிறகு ஒத்திவைக்க வேண்டும் என்றும் வர்த்தகம் மற்றும் தொழில் சபை அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதற்குப் பதிலளித்த ராகுல்காந்தி, தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், ”டெல்லியில் உள்ள வணிகர்களாகிய உங்கள் அனைவரையும் நாங்கள் நேசிக்கிறோம், உங்கள் குரலைக் கேட்கிறோம். சமீபத்தில் அரசு மெட்ரோ சேவையை நிறுத்தி, சாலைகளை அடைத்து, தலைநகரையே முடக்கியது.
நம் நாட்டில் வாக்குரிமை திருடப்பட்டு இருக்கும் சூழலில், இங்கு எதுவுமே பாதுகாப்பானதல்ல. உங்கள் கடை, உங்கள் சேமிப்பு, உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் என அனைத்தும் ஆபத்தில் உள்ளன. குற்றம் சாட்டப்பட்ட நான்காவது நபரான ஞானேஷ் குமாரைப் பதவியிலிருந்து நீக்க நரேந்திர மோடியிடம் கூறுங்கள். அடுத்த 30 வினாடிகளில் இந்த போராட்டங்கள் முடிவுக்கு வரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
