புதுடில்லி: பிரதமர் மோடியின் மறைந்த தந்தை குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே ஒருமையில் பேசியதற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: சித்தாந்த ரீதியான எதிர்ப்பைத் தனிப்பட்ட அவமதிப்புகளாக மாற்றுவதும், அரசியல் கருத்து வேறுபாடுகளைத் தரக்குறைவான வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். தனிப்பட்ட கண்ணியத்தின் வரம்புகளைத் தாண்டாதீர்கள்.
பிரதமரின் குடும்பத்தைக் குறிவைப்பதும் காங்கிரஸின் விரக்தியையும் சித்தாந்த ரீதியான திவால்நிலையையும் பிரதிபலிக்கின்றன. இது ஒரு தனிநபருக்கோ அல்லது ஒரு குடும்பத்திற்கோ இழைக்கப்படும் அவமதிப்பு மட்டுமல்ல.
இந்திய அரசியலின் கண்ணியத்தின் மீதான தாக்குதல். காங்கிரஸ் கட்சி அரசியல் வீழ்ச்சியை மட்டுமல்ல, முழுமையான சித்தாந்தச் சரிவையும் சந்தித்துள்ளது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கூறியதாவது: சுயசார்பு நிலையை அடைவதற்கான இந்தச் சூழலில், நாம் உள்நாட்டு உற்பத்தியில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது; அந்த உற்பத்தி செலவு குறைந்ததாகவும், செயல்பாட்டு ரீதியாகச் சிறந்ததாகவும், உலகளாவிய அளவில் போட்டித்தன்மை கொண்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நமது சுயசார்பு என்பது பாதுகாப்பை வழங்குவது மட்டுமன்றி, பொருளாதார ரீதியாகவும் நம்மை வலுப்படுத்த வேண்டும். பத்து ஆண்டுகால அனுபவத்திற்குப் பிறகு, பலவீனங்கள் எங்கே இருக்கின்றன என்பதைக் கண்டறியும் திறன் நமக்கு இருக்க வேண்டும்.
எந்தெந்தப் பொருட்களை நாம் வெளிநாடுகளிலிருந்து பெறுகிறோம், எங்கே நமது சார்புநிலை அதிகமாக உள்ளது, எந்தெந்தத் துறைகளில் நாம் முதலில் சுயசார்பை அடைய வேண்டும் என்பதை அறிந்துகொள்வது மிக அவசியம். இத்தகைய பலவீனங்களை எவ்வாறு சரிசெய்வது என்பதையும் நாம் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
