போபால்: மபியில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் நடத்திய கொள்முதல் தொடர்பாக ஏஐ வாயிலாக நடத்திய ஆய்வில் பல கோடி ரூபாய் மதிப்புக்கு முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த 135 தலைமை நகராட்சி அதிகாரிகள் உட்பட 392 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
இது குறித்து நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதிவாரியத்துறை கூடுதல் செயலர் சஞ்சய் துபே கூறுகையில், முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை துவங்கியது. பலரின் சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. சிலர் பதவி இறக்கமும், சிலர் பணி நீக்கமும் செய்யப்பட்டனர் என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், சஞ்சய் துபே பேசிய வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், துறையில் நடந்த முறைகேடு குறித்து தனக்கு தெரியும் எனக்குறிப்பிட்டு இருந்தார். இதனை வைத்து பாஜ அரசை காங்கிரஸ் விமர்சித்து வந்தது.
இது பற்றி தற்போது அவர் கூறுகையில், பயிற்சி முகாம் நடந்த போது 146 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முறைகேடு செய்தவர்களிடம் இருந்து 4 கோடி ரூபாய் மீட்கப்பட்டது. இதுவரை 392 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.
