“அவர்களால் கண்டிப்பாக நிரூபிக்கவே முடியாது” – அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி!

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் அமைந்தகரையில் இன்று (26.10.2026) கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரை வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையரகத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து  ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அன்பில் மகேஸ் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அன்பில் மகேஸுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனைக்குப் பின்னர் அன்பில் மகேஷ் மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அதன் பிறகு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார். 

இதற்கிடையே, செய்தியாளர்களுக்கு அன்பில் மகேஷ் அளித்த பேட்டியில், “காவலர்களுடைய அழைப்பை ஏற்று முழுமையாக நாங்கள் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறோம். ஏற்கனவே செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி கிட்டத்தட்ட ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறோம். நாங்கள் முன் ஜாமின் தொடர்பாக  உயர் நீதிமன்றத்திற்கு செல்லும்போது, அரசு தரப்பில் முன் ஜாமின் கொடுக்கக் கூடாது என்பதற்காக சில காரணங்களை முன்வைப்பார்கள். ஆனால், அவர்கள் முன்வைத்துள்ள காரணங்கள் அனைத்தும் கதைகளாகத்தான் இருக்கின்றன. 

அதனால், அவர்களால் கண்டிப்பாக அதை நிரூபிக்கவே முடியாது. முன் ஜாமின் டிஸ்மிஸ் ஆனவுடன் உடனடியாக என்னைக் கைது செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் அவர்களுக்கு இருந்திருக்கிறது. எங்களைப் பொறுத்தவரையில், ஒன்றே ஒன்றுதான். அரசுப் பள்ளி என்று வரும்போது, அது அவமானத்தின் அடையாளம் அல்ல; அது பெருமையின் அடையாளம்” எனத் தெரிவித்தார்.