தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் அமைந்தகரையில் இன்று (26.10.2026) கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரை வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையரகத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அன்பில் மகேஷ் அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அன்பில் மகேஷுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனைக்குப் பின்னர் அன்பில் மகேஷ் மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அதன் பிறகு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இந்நிலையில் இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர் சகோதரர் அன்பில் மகேஷை கைது செய்துள்ள இந்த சர்க்கஸ் (Circus) ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
திரும்பிய திசையெல்லாம் தறிகெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் – விலைவாசி உயர்வு – த.வெ.க.வினரின் அட்டூழியங்கள் என இந்த கோமாளி அரசின் தோல்விகளை மறைக்கவும் – திசைத்திருப்பவுமே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார் டம்மி சி.எம். (CM). அன்பில் மகேஸ் இந்தச்சூழலை சட்டப்படி எதிர்கொண்டு மீண்டு வருவார். வழக்கினாலும் – கைது நடவடிக்கைகளாலும் கழக உடன்பிறப்புகளை ஒரு போதும் அடக்க முடியாது”எனத் தெரிவித்துள்ளார்.
