டேராடூன்: உ த்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த ஆண்டு

டேராடூன்: உ த்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், பா.ஜ.,விலிருந்து பல மூத்த தலைவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசுக்கு தாவிவிட்டனர். ‘சட்டம் – ஒழுங்கு சரியில்லை; ஒரே அராஜகம்’ என, இவர்கள் முதல்வர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

போதாக்குறைக்கு, 2022ல் டேராடூனில் உள்ள ஒரு ஹோட்டலில், 19 வயதான வரவேற்பாளராக பணிபுரிந்த அங்கிதா பண்டாரி கொலை வழக்கு சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஒரு வி.ஐ.பி., அங்கிதாவை தன் அறைக்கு அழைத்துள்ளார். பின், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில், ஒரு வி.ஐ.பி.,க்கு தொடர்பு உள்ளது என, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும், நம்ம ஊர், ‘சார்’ போல அந்த வி.ஐ.பி., யார் என, கண்டுபிடிக்க முடியவில்லை.

கடந்தாண்டு இந்த கொலை வழக்கில் தொடர்புடைய, பா.ஜ., தலைவர் மகன் உட்பட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது விசாரணை நீதிமன்றம். ஆனால் எதிர்க்கட்சியினர் மீண்டும் அந்த, ‘வி.ஐ.பி.,’ விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். மேலும், அது பா.ஜ., தலைவர் எனவும் சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ., ஆட்சியை தக்க வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரும் 14ல், டேராடூன் வருகிறார் பிரதமர் மோடி. அப்போது, 30,000 கட்சி தொண்டர்களிடம் உரையாடுகிறார். பா.ஜ.,வையும், முதல்வர் புஷ்கர் சிங் தாமியையும் மோடி காப்பாற்றுவாரா என, மூத்த தலைவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Source link