விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 11ஆம் தேதி (11.10.206) இரவு தங்களது 7 வயது மகளுடன் பெற்றோர் வீட்டில் உறங்கியுள்ளனர். மறுநாள் அதிகாலை (12.10.2026) அவர்கள் எழுந்து பார்த்தபோது, அருகில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் காவல் நிலைய போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து சிறுமியை மீட்பதற்காக 3 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதன்படி தனிப்படையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த நிலையில், அப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். குறிப்பாக, அப்பகுதியில் உள்ள வயல்வெளிகள், கரும்புத் தோட்டங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தேடினர். எனினும், சிறுமி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இத்தகைய சூழலில் தான் போலீசார் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழகக் காவல்துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் கடந்த புதன்கிழமை (21.10.2026) உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் சிறுமி காணாமல் போன வழக்கில், பரதன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராஜதுரையை சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து சுமார் நான்கு மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிறுமி படித்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ராஜதுரை அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, பரதன்தாங்கல் கிராமத்தில் உள்ள சுடுகாட்டுப் பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவர் புதிதாக வீடு கட்டுவதற்காக வாங்கிய இடத்திற்கும் அழைத்துச் சென்று சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, ராஜதுரை அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையே, காஞ்சிபுரம் சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான அதிகாரிகள், சிறுமியின் வீட்டில் அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சிபிசிஐடி அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, சிறுமி காணாமல் போன வழக்கில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
