சென்னை : தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க, 100 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்ட புகாரில், தி.மு.க.,வைச் சேர்ந்த பள்ளி கல்வித் துறை முன்னாள் அமைச்சர் மகேஷ், 48, மீது, ஊழல் தடுப்பு சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சென்னையில் நேற்று அவரை கைது செய்தனர்.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது மற்றும் கட்டுமான அனுமதிகள் பெறுவதில் முறைகேடு நடந்ததாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இளங்கோவன் என்பவர் புகார் அளித்தார். விசாரணையில், தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து, 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த லஞ்ச விவகாரத்தில் ஈடுபட்ட தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவரும், தி.மு.க.,வின் செய்தி தொடர்பு குழு துணைத் தலைவருமான பி.டி.அரசகுமாரை, 58, ஜூன் 27ல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பின், அவர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில், முன்னாள் எம்.எல்.ஏ., முத்துகுமார் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், 177 தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளிடம் லஞ்சம் வாங்கியது கண்டறியப்பட்டு, அதில் ஈடுபட்டவர்களின் வீடுகள், அலுவலகங்கள், பள்ளி வளாகங்கள் மற்றும் பள்ளி கல்வித்துறை இயக்குநரகம் அமைந்துள்ள டி.பி.ஐ., வளாகம் உள்ளிட்ட பல இடங்களில் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இவற்றில், குற்றச்செயலுடன் தொடர்புடைய ஆவணங்கள், தனியார் பள்ளிகள் தொடர்பான பதிவுகள், நிதி தொடர்பான பதிவுகள், மொபைல் போன்கள், கணினிகள், ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் இதர மின்னணு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. சாட்சிகளின் வாக்குமூலங்கள், ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் அரசு ஆவணங்களின் அடிப்படையில், அப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த மகேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக, ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடி செய்தது கண்டறியப்பட்டதால், அவர் மீது ஊழல் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, சென்னை மற்றும் திருச்சியில் உள்ள மகேஷுக்கு சொந்தமான நான்கு இடங்கள், அவரது உதவியாளரான வாளாடி கார்த்திக் உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
மேலும், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள மகேஷ் வீடு, தி.நகரில் உள்ள அலுவலகம், ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது உதவியாளர் கார்த்திக் வீடு ஆகியவற்றில் மேற்கொண்ட சோதனையில், மடிக்கணினி மற்றும் ‘டிஜிட்டல்’ ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல, திருச்சி தென்னுார் அண்ணா நகரில் உள்ள மகேஷ் வீட்டில் கணினிகள், சில டிஜிட்டல் ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.
பின், விசாரணைக்கு ஆஜராகும்படி மகேஷுக்கு, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், ‘சம்மன்’ அனுப்பினர். அதன்படி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரான மகேஷிடம் எட்டு மணி நேர விசாரணையில், 246 கேள்விகளுக்கு பதில்கள் பெறப்பட்டன.
இதற்கிடையே, முன்னாள் எம்.எல்.ஏ., முத்துகுமார் வீட்டில் கிடைத்த, ‘ஆடியோ’ பதிவு ஒன்றை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக, 420 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகவும், முத்துகுமாருக்கு 70 கோடியும், அரசகுமாருக்கு 50 கோடியும், மீதமுள்ள 300 கோடி ரூபாய் மகேஷ் வீட்டில் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கில் முன்ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மகேஷ் மனு தாக்கல் செய்தார். மனுவை நேற்று உயர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வட்டாரம் பரபரப்பானது.
சென்னை அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் இருந்த மகேஷை கைது செய்தனர்; சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று, இரவு வரை விசாரித்தனர்.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட பிற சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மகேஷ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, ”மனுதாரருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யும் முன், ஊழல் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ், உரிய அதிகாரியிடம் அனுமதியை பெறவில்லை. காவல் துறையின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது.
”மனுதாரர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். எங்கும் தப்பி செல்லவோ, சாட்சிகளை கலைக்கவோ மாட்டார். அவர், எப்போது வேண்டுமானாலும், போலீசார் விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளார். எனவே, அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை,” என்றார்.
அப்போது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் வாதாடியதாவது: இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முத்துகுமார் தலைமறைவாக உள்ளார். வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. இந்த விவகாரத்தில், 400 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு உள்ளது தெரிகிறது. எனவே, மனுதாரருக்கு முன்ஜாமின் வழங்கினால், அந்த தகவல்கள் எதுவும் வெளியே வராது. மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். முத்துகுமாரை மனுதாரர் தான் பாதுகாக்கிறார். பணப்பரிமாற்றம் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால், முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது என்ற காவல் துறை தரப்பு வாதத்தை ஏற்று, மகேஷுக்கு முன்ஜாமின் வழங்க மறுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
‘அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்’ என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு, முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த மகேஷ் கைது செய்யப்பட்டு இருப்பதன் வாயிலாக, சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தை திசை திருப்பி விடலாம் என, ஆளும் அரசு நினைக்கிறது.
மகேஷ் தன் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால், மக்களின் கோபத்தைத் திசை திருப்பித் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கும், த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கைது செய்யப்பட்டதை கண்டிக்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
