ஆமதாபாத்: காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் அரையிறுதிக்கு இந்திய பெண்கள், ஆண்கள் அணிகள் முன்னேறின.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் முதல் சீசன் நடக்கிறது. இதில் 13 ஆண்கள், 10 பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன.
‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய பெண்கள் அணி, நேற்று நடந்த லீக் போட்டியில் நைஜீரியா அணியை எதிர்கொண்டது. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, முதல் பாதி முடிவில் 24–6 என முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து 2வது பாதியிலும் அசத்திய இந்தியா, ஆட்டநேர முடிவில் 38–10 என, 28 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஏற்கனவே முதல் மூன்று போட்டியில் மலேசியா (73–13), சிங்கப்பூர் (32–16) , உகாண்டா (41–18) அணிகளை வீழ்த்திய இந்தியா, தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்து 8 புள்ளிகளுடன் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது. ‘பி’ பிரிவில் முதலிரண்டு இடம் பிடித்த இலங்கை (6 புள்ளி), கென்யா (6) அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
ஆண்களுக்கான ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நைஜீரியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 50–23 என, 27 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே இங்கிலாந்து (46–26), உகாண்டா (44–30), மலேசியா (37–23) அணிகளை வீழ்த்திய இந்தியா, வரிசையாக 4வது வெற்றியை பதிவு செய்து 8 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.
