100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி

புதுடில்லி: நுாறு சதவீதம் வரை எத்தனால் கொண்ட, ‘இ100’ எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு அனுமதி அளித்து, மோட்டார் வாகன விதிகளில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது.

இதன்படி, அதிக அளவு எத்தனால் கலந்த எரிபொருளில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, உரிய சான்றிதழ் பெற்ற வாகனங்கள் இ100 எரிபொருளை பயன்படுத்தலாம். எனினும், தற்போது பயன்பாட்டில் உள்ள, ‘இ20’ (20 சதவீதம் எத்தனால், 80 சதவீதம் பெட்ரோல்) எரிபொருளில் இயங்கும் வாகனங்கள், ‘இ85’ அல்லது இ100 எரிபொருளை பயன்படுத்த முடியாது என, அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இ20 அல்லது வழக்கமான பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு, இந்த புதிய விதிகள் பொருந்தாது.

அதிக எத்தனால் கலப்பு எரிபொருளை பயன்படுத்தும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், வாகனங்களின் வகைப்பாடு, எரிபொருள் தரம், மாசு உமிழ்வு சோதனை தொடர்பான தொழில்நுட்ப விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டை அதிகரிப்பதன் வாயிலாக, வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது, 20 சதவீத எத்தனால் கலந்த இ20 பெட்ரோல் நாடுமுழுதும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

சாதாரண பெட்ரோல் வாகனங்களை போல் இல்லாமல், ‘பிளக்ஸி பியுல்’ எனப்படும் பல வகை எரிபொருளில் இயங்கும் வாகனங்கள், இ85 மற்றும் இ100 போன்ற அதிக எத்தனால் கலப்பு எரிபொருளிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. கடந்த ஜூன் மாதம், ‘மாருதி சுசூகி’ நிறுவனம், இ20 முதல் இ100 வரையிலான எரிபொருளில் இயங்கும் காரை அறிமுகப்படுத்தியது. அதேபோல், ‘டொயோட்டா, டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் நிறுவனங்களும் உருவாக்கி வருகின்றன.

Source link