கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகள் பரோலில் விடுதலை: மோசமான முன்னுதாரணம் என ஹிந்து அமைப்புகள் கண்டனம்

சென்னை: ‘கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளை, த.வெ.க., அரசு 60 நாட்கள் பரோலில் விடுதலை செய்திருப்பது, மோசமான முன்னுதாரணம்’ என, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

கடந்த 1998 பிப்ரவரி 14ம் தேதி, கோவையில், 11க்கும் அதிகமான இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. முன்னாள் துணை பிரதமர் அத்வானியை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலில், 58 பேர் கொல்லப்பட்டனர்; 231 பேர் படுகாயமடைந்தனர். இது தமிழகத்தையும் தாண்டி, நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் அல் உம்மா அமைப்பு இருந்தது கண்டறியப்பட்டு, அந்த அமைப்பின் தலைவர் பாஷா உட்பட, 168 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், பாஷா உள்ளிட்டோருக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

இந்நிலையில், தமிழக சிறைகளில் நீண்ட காலம் இருக்கும் முஸ்லிம் கைதிகளை, முன் விடுதலை செய்ய வேண்டும் என, முஸ்லிம் அமைப்புகளும், சில கட்சிகளும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தன. கடந்த 2011ல் அ.தி.மு.க., கூட்டணியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி, இரண்டு இடங்களில் வென்ற பின், இந்த கோரிக்கை வலுப்பெற்றது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின், முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என, முஸ்லிம் அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. பா.ஜ., தவிர, மற்ற கட்சிகள் அவர்களது கோரிக்கையை ஆதரித்தன. கடந்த 2021 முதல் 2026 வரையிலான தி.மு.க., ஆட்சியில், மனிதநேய மக்கள் கட்சி. வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் கொடுத்த அழுத்தத்தால், முஸ்லிம் சிறைவாசிகள் சிலரை, தி.மு.க., அரசு விடுதலை செய்தது. மேலும் சிலரை, இரண்டு மாதங்களுக்கும் மேலான ‘பரோல்’ விடுமுறையில் வெளியே அனுப்பியது.

கடந்த மே 10ல், த.வெ.க., அரசு பொறுப்பேற்றதும், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வி.சி.க., அமைச்சர் வன்னி அரசு, முஸ்லிம் லீக் அமைச்சர் ஷாஜகான், த.வெ.க., அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் சண்முகம் உள்ளிட்டோர், ‘நீண்ட காலம் சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளை விடுவிக்க வேண்டும்’ என முதல்வர் விஜய், சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

சிறைவாசிகள் 22 பேர்:

அதைத் தொடர்ந்து, முஸ்லிம் சிறைவாசிகள் 22 பேருக்கு, 60 நாட்கள் பரோல் வழங்க முடிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாக, முகமது ஹாசன், 46, முகமது அலி, 52, முகமது அஜாம், முகமது அன்சாரி, 58, நவாப்கான் ஆகியோர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள்.

எந்தத் தவறும் செய்யாத அப்பாவி பொது மக்களை குண்டு வைத்து கொன்ற, கொடிய பயங்கரவாத தாக்குதல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களை, பரோலில் விடுதலை செய்வது, மோசமான முன்னுதாரணம் என்றும், இது மறைமுகமாக பயங்கரவாதத்தை ஆதரிக்கும் செயல் எனவும், பா.ஜ.,வும், ஹிந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அதன் விபரம்:

தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம்:

கோவை குண்டுவெடிப்பு பயங்கரவாத வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருப்பவர்களை பரோலில் விடுவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த கொடூரத் தாக்குதலில் படுகாயம் அடைந்து, 250-க்கும் அதிகமானோர், வாழ்நாள் முழுதும் ஆறாத வடுக்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

தங்கள் குடும்பத் தலைவர்களையும், பிள்ளைகளையும், உறவுகளையும் இழந்து தவிக்கும் அப்பாவிக் குடும்பங்களின் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுவது போல, இந்த பரோல் உத்தரவு அமைந்துள்ளது. நாட்டின் இறையாண்மைக்கும், பொது அமைதிக்கும் சவால் விடுத்து, அப்பாவி பொது மக்களைக் கொன்று குவித்த கொடூரக் குற்றவாளிகளுக்கு பரோல் சலுகை வழங்கப்படுவது நீதியை அவமதிக்கும் செயல்.

ஓட்டு வங்கிக்காக மக்களின் பாதுகாப்பையும் சட்டத்தின் மாண்பையும் த.வெ.க., அரசு அடமானம் வைப்பது, எவ்வகையிலும் மன்னிக்க முடியாத துரோகம். நாட்டின் முதன்மைத் தொழில் நகரங்களில் ஒன்றான கோவையின் அமைதியை சீர்குலைக்க நினைத்த சக்திகளை பரோலில் விடுவிப்பது, ஒட்டுமொத்த தமிழகத்தின் அமைதிக்கும் அச்சுறுத்தலாக மாறும் அபாயம் உள்ளது. இது சட்டத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைத்து விடும். எனவே, பரோல் உத்தரவை, தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.

ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன்:

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு பரோல் வழங்கப்பட்டிருப்பது, நாட்டின் பாதுகாப்பிற்கே வேட்டு வைக்கும் சிறுபான்மை தாஜா அரசியல். கொடிய குற்றவாளிகளுக்கு இதுபோன்ற சலுகை காட்டுவது, மோசமான முன்னுதாரணம். சிறுபான்மையினரைத் தாஜா செய்து, ஓட்டு வங்கி அரசியல் செய்யும் தமிழக கட்சிகள், நாட்டின் பாதுகாப்பில் அக்கறையின்றி, இத்தகைய முடிவுகளை எடுப்பது, மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. பரோல் விடுதலை முடிவை, தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.

ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்: கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளான அல் உம்மா அமைப்பின் நிர்வாகிகளுக்கு நீண்ட கால பரோல் வழங்கப்பட்டிருப்பது கோவையின் அமைதிக்கு ஆபத்தானது. குண்டு வைத்து அப்பாவி பொது மக்களை கொன்று குவித்த பயங்கரவாதிகளுக்கு பரோல் கொடுப்பது பயங்கரவாதத்தை ஆதரிக்கும் செயல். தொழில் நகரான கோவையில் அமைதியை சீர்குலைக்க நினைத்தவர்களுக்கு, எந்த வகையிலும் மன்னிப்போ கருணையோ கூடாது.

லட்சிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்:

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு 60 நாட்கள் பரோல் வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய இந்தக் கொடூரக் குற்றவாளிகளுக்கு பரோல் சலுகை வழங்கிய தமிழக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களின் பாதுகாப்பும், சட்டத்தின் மீதான நம்பிக்கையும் முதன்மையானவை. தேசியப் பாதுகாப்பு, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தப் பரோல் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Source link