17 கைதிகள் தப்பி ஓட்டம்; தேனி சிறையில் நள்ளிரவில் சம்பவம்

தேனி: தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடினர். பின் ஒருவர் சரணடைந்தார். மாயமானவர்களை பிடிக்க, போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

தேனி: தேனி மாவட்ட சிறை ஆண்டிபட்டி தாலுகா தேக்கம்பட்டி அருகே உள்ளது. இந்த சிறையில் 4 பிளாக்குகள் உள்ளன. நேற்றிரவு 3ம் பிளாக்கில் ஒரு கைதிக்கு வலிப்பு வந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து சிறப்பு எஸ்.ஐ., மதன்மோகன் பிளாக்கை திறந்தார்.

அப்போது அங்கிருந்த கைதிகள் லிங்கபிரசாந்த் 25, ராஜா சிக்கந்தர் 24, கருப்பசாமி 25, சிலம்பரசன் 24, திருப்பதி 23, சபரிநாதன் 24, பொன்முத்து செல்வம் 26, பிரவீன் 27, மீனாட்சிசுந்தரம், நிஜந்த், கார்த்திக்ராஜா, முகிலன், செல்வா, தருண், ராஜ்குமார், முத்து இளங்கோ, ராஜீவின் ஆகியோர் எஸ்.ஐ., மதன்மோகனை தாக்கி வெளியே வந்தனர். கதவு அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் தங்கபாண்டியை தாக்கிவிட்டு சிறையில் இருந்து தப்பினர்.

காயமடைந்த எஸ்.ஐ., மதன்மோகன், தங்கபாண்டி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சிறையில் இருந்து 10 கி.மீ., சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போலீசார், மாவட்டம் முழுவதும் ரோந்து பணியை தீவிரப்படுத்தி தப்பிய கைதிகளை தேடுகின்றனர்.

தப்பிய கைதிகளில் ஒருவரான பிரவீன் மீண்டும் சிறையில் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்தார். சிறையில் ஆய்வு மேற்கொண்ட ஐ.ஜி., விஜயேந்திர பிதாரி தப்பியவர்களை பிடிக்க 17 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Source link