மாற்றுத் திறனாளிகள் 400 பேருக்கு இணைப்புச் சக்கர ஸ்கூட்டர் வழங்க ரூ.4 கோடி ஒதுக்கி அரசாணை

சென்னை: மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலர் சோ.மதுமதி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் படிப்பு, வேலைக்காகப் பயணம் செய்வதில் உள்ள சிரமத்தை குறைக்கவும், அவர்களின் தன்னிச்சையான செயல்பாட்டுக்கும் வாழ்வாதாரத்துக்கும் உதவும் வகையிலும் முதல்கட்டமாக 400 பேருக்கு ரூ.4 கோடியில் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட உள்ளன.

இவற்றை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் கொள்முதல் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை பெற மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

உயரம் குறைந்தவராகவும், கைகள் நல்ல நிலையில் உள்ளவராகவும், 18 முதல் 65 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

மாவட்ட ஆட்சியர், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அடங்கிய தேர்வுக்குழு நேர்முகத் தேர்வு நடத்தும். அதில் ஸ்கூட்டரை இயக்கிக்காட்டச் சொல்லி, தகுதியானவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆண்டு ஒதுக்கீட்டைவிட அதிகமாக இருந்தால், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு, அடுத்தாண்டு முன்னுரிமை வழங்கப்படும்.

வாகனத்தை விற்கவோ, இணைப்புச் சக்கரங்களைக் கழற்றிச் சாதாரண ஸ்கூட்டராகப் பயன்படுத்தவோ மாட்டேன் என உறுதிமொழிக் கடிதம் பெறப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Source link