தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் இரவு நேரத்தில் தப்பி ஓடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தற்பொழுது வரை நான்கு பேர் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள சிறைவாசிகளை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தேனி மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கி உள்ளது. காரணம் தமிழகத்திலேயே முதல் முறையாக 17 கைதிகள் ஒரே நேரத்தில் சிறையில் இருந்து தப்பிய இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மாவட்ட சிறைச்சாலையில் இருந்த கைதிகள் காவலர்களை கூண்டோடு தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். நேற்று இரவு முழுவதும் தேனி மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் இவர்களைப் பிடிக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதில் மதுரையைச் சேர்ந்த பிரவின் என்ற கைதி நேற்று இரவே கைது செய்யப்பட்டான். அதனைத் தொடர்ந்து ஆண்டிப்பட்டி அருகே சிலம்பரசன் என்ற கைதியையும் போலீசார் கைது செய்தி ருந்தனர்.
இந்தநிலையில் ராஜா சிக்கந்தர், ராஜ்குமார் ஆகிய இருவரை போலீசார் தற்பொழுது கைது செய்துள்ளனர். இதனால் தப்பி ஓடிய 17 கைதிகளில் மொத்தம் நான்கு பேர் தற்போது வரை பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள நபர்களை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். தற்பொழுது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மீதமுள்ளவர்கள் பதுங்கி இருக்கும் இடங்களை கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.
கைதிகளை பிடிப்பதற்காக 17 தனி ப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐஜி விஜேந்திர பிதாரி தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட சிறையில் ஆய்வு செய்த பிறகு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தப்பி ஓடியவர்கள் மதுரை, தேனி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. அதேபோல் இதில் மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு சென்னை புழல் சிறையில் இருந்து இரு கைதிகள் தப்பியோடிய சம்பவமும் அதனைத் தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.
