தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலையில், சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 விசாரணை கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேக்கம்பட்டி சிறையில் ஒரே அறையில் விழுப்புரத்தைச் சேர்ந்த லிங்கம், ராஜா சிக்கந்தர், கருப்பசாமி, சிலம்பரசன், திருப்பதி, மீனாட்சி சுந்தரம், சபரி உள்ளிட்ட 17 விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.
திங்கள் கிழமை (அக். 26) இரவு 10.30 மணியளவில், கைதி ஒருவருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி சத்தமிட்டுள்ளனர். இதைக் கேட்டு சிறைக் காவலர் தங்கப்பாண்டி உட்பட மூன்று காவலர்கள் கதவைத் திறந்து உள்ளே சென்றுள்ளனர்.
அப்போது, அங்கு மறைந்திருந்த கைதிகள் அனைவரும் சேர்ந்து காவலர்களைத் திடீரெனக் கடுமையாகத் தாக்கிவிட்டு சிறை வளாகத்தை விட்டுத் தப்பியோடினர்
இந்தத் தாக்குதலில் காவலர் தங்கப்பாண்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்ததும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கவுதம் மற்றும் தென்மண்டல ஐ.ஜி விஜயேந்திர பிடாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். சிறையைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட போலீஸார் உடனடிப் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க ஐ.ஜி விஜயேந்திர பிடாரி உத்தரவின் பேரில் 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நள்ளிரவு முதல் நடைபெற்ற தீவிர தேடுதலில், சிறை அருகே உள்ள காட்டுப்பகுதியில் மறைந்திருந்த பிரவீன், மற்றும் சிலம்பரசன், ராஜ்குமார், ராஜா சிக்கந்தர் ஆகிய 4 கைதிகளைப் போலீஸார் மீண்டும் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.
எஞ்சிய 13 பேரைக் கண்டுபிடிக்க தேனி, மதுரை, திண்டுக்கல் மற்றும் கேரளாவின் இடுக்கி எல்லைச் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மோப்ப நாய்கள் மற்றும் ட்ரோன்கள் உதவியுடன் அருகில் உள்ள மலை மற்றும் வயல்வெளிகளில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
1995-ஆம் ஆண்டு வேலூர் கோட்டை சிறையில் இருந்து எல்.டி.டி.இ (LTTE) அமைப்பைச் சேர்ந்த 43 பேர் சுரங்கம் தோண்டி தப்பிய சம்பவத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கைதிகள் சிறையிலிருந்து தப்பிய பெரிய சம்பவங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
