புதுடில்லி: நாடு முழுதும் வாகன பெருக்கத்தால், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

புதுடில்லி: நாடு முழுதும் வாகன பெருக்கத்தால், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தலைநகர் டில்லியில் குளிர்காலங்களில் வாகனங்களால் ஏற்படும் மாசு காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் டில்லி அரசு, 2026 – 2030ம் ஆண்டுக்கான புதிய மின்சார வாகன கொள்கையை வகுத்து, அதற்கான வரைவு அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்காக வைத்துள்ளது.

வரும் 2028ம் ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல் வாகனங்களை படிப்படியாக தடை செய்யும் வகையில் இந்த வரைவு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

டில்லி போக்குவரத்து துறை வெளியிட்ட இந்த வரைவு அறிக்கையில், வாகன புகையால் ஏற்படும் மாசை குறைக்க கடுமையான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அந்த வரைவு அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:

 வரும் 2028, ஏப்., 1 முதல் புதிய பெட்ரோல் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் பதிவு செய்யப்பட மாட்டாது. இனி மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்.

 வரும் 2027, ஜன., 1 முதல், மின்சார ஆட்டோக்கள் மட்டுமே புதிதாக பதிவு செய்யப்படும்.

 பள்ளி பஸ்களும் படிப்படியாக மின்சார வாகனமாக மாற்றப்படும். 2030ம் ஆண்டுக்குள் 30 சதவீதம் அளவுக்கு மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 அரசு துறைகளின் பயன்பாட்டுக்காக இனி மின்சார வாகனங்களே கொள்முதல் செய்யப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, மின்சார வாகனத்தை வாங்க ஊக்குவிக்கும் வகையில் தாராள சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 2.25 லட்சம் ரூபாய் வரையிலான மின்சார டூ – வீலர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். ஒரு கிலோ வாட்டுக்கு 10,000 ரூபாய் என்ற வகையில், முதல் ஆண்டில் 30,000 ரூபாய் வரை வழங்கப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த ஊக்கத் தொகை படிப்படியாக குறைக்கப்படும்.

அதே போல், மின்சார ஆட்டோக்களுக்கு முதல் ஆண்டில் 50,000 ரூபாய் ஊக்கத் தொகை கிடைக்கும்; அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்த ஊக்கத் தொகை குறைக்கப்படும்.

‘என்1’ பிரிவில் உள்ள மின்சார சரக்கு வாகனத்தை வாங்குவோருக்கு, முதல் ஆண்டில் 1 லட்சம் ரூபாய் வரை ஊக்கத் தொகை கிடைக்கும்.

பழைய வாகனங்களை மாற்றி, அதற்கு பதிலாக மின்சார வாகனங்கள் வாங்குவோரையும் ஊக்குவிக்கும் வகையில், ‘ஸ்கிராப்’ ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது.

‘பி.எஸ்., 4’ வகை டூ – வீலருக்கு பதிலாக மின்சார வாகனம் வாங்கினால் 10,000 ரூபாய் வழங்கப்படும். ஆட்டோ எனில் 25,000 ரூபாய் ஊக்கத் தொகை. அதுவே, 30 லட்சம் ரூபாய் வரையிலான பெட்ரோல் காரை மாற்றி, பேட்டரிக்கு மாற விரும்பினால் 1 லட்சம் ரூபாய் கிடைக்கும். சரக்கு வாகனங்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும். அடுத்த ஆறு மாதங்களில் அவர்கள் மின்சார வாகனங்களுக்கு மாறும் வகையில் இந்த தாராள ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

மின்சார வாகனங்களுக்கான சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்திலும் 100 சதவீத விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், 30 லட்சம் ரூபாய் வரையிலான கார்களுக்கு முழு விலக்கு கிடைக்கும். பெட்ரோல் மற்றும் பேட்டரியில் இயங்கும் ‘ஹை ப்ரிட்’ வகை கார்கள் எனில், 50 சதவீத விலக்கு மட்டுமே அளிக்கப்படும். 30 லட்சம் ரூபாய்க்கு மேல் விலையுள்ள கார்களுக்கு எந்த விலக்கும் அறிவிக்கப்படவில்லை.

பெட்ரோல், டீசலுக்கு பதிலாக மின்சார வாகனங்களை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதால், டில்லி முழுதும் அதற்கான சார்ஜிங் மையங்களை அமைப்பதற்கான உள்கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

அதாவது, அதிக இடங்களில் சார்ஜிங் மையங்கள் விரைவில் அமைக்கப்படவுள்ளன. இந்த திட்டத்தின் மூலம், மின் வாகன துறையில் புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய பேட்டரிகளை சுழற்சி முறையில் கையாள, ‘பேட்டரி சேகரிப்பு மையங்கள்’ அமைக்கப்படும். இந்த வரைவு அறிக்கை மீது பொதுமக்கள் அளிக்கும் கருத்துகளுக்கு ஏற்ப இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

Source link