செஞ்சி சிறுமி மாயமாகி 16 நாளாச்சு.. சிபிசிஐடி முக்கிய அறிவிப்பு.. விசாரணை தீவிரம்

விழுப்புரம்: தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதங்களாகிறது. திமுக, அதிமுகவுக்கு மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சிக்கு வந்தனர். திமுக ஆட்சியில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தவெக
தீவிரமாக முன்வைத்தது. ஆனால் தவெக ஆட்சிக்கு வந்தும் காட்சிகள் மாறவில்லை. கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை தீவிரமடைந்துள்ளது. விழுப்புரம், செஞ்சியில் 6 வயது சிறுமி மாயமாகி 16 நாட்களாகிவிட்டது. சிறுமி குறித்து முக்கிய அறிவிப்பை சிபிசிஐடி வெளியிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டி குளக்கரை தெருவை சேர்ந்தவர்கள் பவானி – வடிவேல் தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இரண்டாவது மகள் ஹேமாவதி என்கிற ஹேமலதா (வயது 6) கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி பிறந்தநாளாகும். பெற்றோர், உறவினர்களுடன் அவருக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கொண்டாட்டத்துக்கு பிறகு சிறுமி தன் பெற்றோருடன் தூங்கியுள்ளார். இரவு கண் உறங்கும்போது இருந்த மகிழ்ச்சி, காலை கண் திறக்கும்போது இல்லை.

அதிகாலை 5.30 மணியளவில் பெற்றோர் எழுந்தபோது சிறுமி ஹேமலதா அங்கில்லை. பதறிய பெற்றோர், உறவினர்கள் அவர்களை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதுகுறித்து சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் சிறுமியின் அம்மா பவானி புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்கள். சிறுமியை கண்டறிய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

ஆலம்பூண்டி சுற்றுவட்டாரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. சிறுமி மாயமான விவகாரம் அதிர்ச்சியையும், பதைபதைப்பையும் ஏற்படுத்தியது. அரசியலிலும் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு, காவல்துறைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதிமுக சார்பில் சிறுமியின் கிராமத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிறுமியை விரைந்து மீட்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சத்தியமங்கலம் காவல்துறையிடம் ஆவணங்களை வாங்கி, கடந்த 5 நாட்களாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுமியின் உறவினர்கள், அந்தப் பகுதியில் குற்ற பின்னணியுடையவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறுமியை பற்றி தகவல் தெரிவிக்க காவல்துறை சார்பில் ஏற்கனவே உதவி எண்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் சிபிசிஐடி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொதுமக்களுக்கு சிபிசிஐடி வெளியிட்டுள்ள வேண்டுகோளில், “சிறுமியை எங்கேனும் பார்த்தாலோ அல்லது சிறுமி குறித்த தகவல் தெரிந்தாலோ உடனடியாக சிபிசிஐடி விழுப்புரம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொடர்புக்கு – 8754992633, 04146-250180. கடைசியாக சிறுமி நீலம் மற்றும் சிவப்பு நிற மலர் அச்சுடன் கவுன் அணிந்திருந்தார். வலது இடுப்பு பகுதியில் மச்சமும், இடது முழங்காலுக்கு கீழ் சிறிய காய தழும்பும் உள்ளது” என்று சிறுமி புகைப்படத்துடனான போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.