தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்: சட்டம்-ஒழுங்கை இரண்டாம் பட்சமாகக் கருதும் தவெக அரசு- பாஜக நாராயணன் திருப்பதி விமர்சனம் – bjp narayanan thirupathy criticized tvk govt 17 prisoners escape from theni jail

தேனி (தெக்கம்பட்டி) கிளைச் சிறையிலிருந்து விசாரணைக் கைதிகள் பதினேழு பேர் நேற்று அக்டோபர் 26 ஆம் தேதி மிக எளிமையான தந்திரத்தைப் பயன்படுத்தி தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் வலிப்பு வந்தது போல நடிக்க, மற்றவர்கள் காத்திருந்தனர். சிறை ஊழியர்கள் கதவைத் திறந்தபோது, ​​கைதிகள் அவர்களைத் தாக்கிவிட்டு வெளியேறினர்.

இந்தச் சம்பவத்தில் இரண்டாம் நிலை சிறை ஊழியர் தங்கபாண்டி தலைப் பகுதியில் காயமடைந்தார். தப்பிச் சென்றவர்களில் ஒருவர் மீண்டும் பிடிபட்ட நிலையில், பதினாறு பேர் இன்னும் பிடிபடவில்லை. இதையொட்டி, பல்வேறு மாவட்டங்களிலும், கேரள எல்லைப் பகுதியிலும் சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு, சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்புடுகிறது. இதுகுறித்து தவெக அரசை விமர்சித்து பாஜக தலைமைச் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நாராயணன் திருப்பதி அறிக்கை

இது மிகவும் பயங்கரமான அல்லது திட்டமிடப்பட்ட சிறை உடைப்பு அல்ல. மாறாக, தவெக அரசாங்கத்தின் நிர்வாகத்தில் சிறைத்துறை பாதுகாப்பு எந்த அளவுக்குச் சீரழிந்துள்ளது என்பதைக் எடுத்துக்காட்டும் மோசமான சீர்கேடு. பல விசாரணை கைதிகளை ஒரே அறையில் அடைத்து வைத்திருப்பது, மருத்துவ அவசரநிலை என்று கூறப்பட்டதைச் சரிபார்க்காமல் கதவைத் திறந்தது, மேலும் கைதிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஊழியர்களைத் தாக்கி வெளியேற அனுமதித்தது போன்றவை, தவெக அரசாங்கத்தின் திறமையின்மை, நிர்வாகக் கோளாறு மற்றும் நிர்வாக சீர்கேட்டையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

சட்டம் ஒழுங்கை இரண்டாம் பட்சமா?

பதினாறு சிறைக் கைதிகள் இன்று வெளியில் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் நிலையில், அதிகாரிகளின் வழக்கமான அறிக்கைகள், தேடுதல் வேட்டைகள் குறித்த குழுக்கள் அமைப்பது ஆகியவை சட்டம்-ஒழுங்கை இரண்டாம் பட்சமாகக் கருதும் தவெக அரசு நிர்வாகத்தின் அலட்சிய போக்கையே காட்டுகிறது. விசாரணை கைதிகள் ஒரு போலியான மருத்துவ அவசரநிலையை உருவாக்கி, அரசுக்குச் சொந்தமான சிறையிலிருந்து எளிதாக வெளியேற முடிந்த அவலத்திற்கு அந்தத் துறையைக் கையாளும் அமைச்சர் நிர்மல் குமார் , முதலமைச்சர் விஜய் அவர்களுமே பொறுப்பாவார்கள்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும்

காயமடைந்த சிறை ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதோடு, தப்பிச் சென்ற மற்ற கைதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். மிக முக்கியமாக, யாருடைய அலட்சியத்தால் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததோ, அந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு கிளைச் சிறையின் பாதுகாப்பு இவ்வளவு எளிதாக சமரசத்திற்கு உள்ளான கேடுகெட்ட நிலைக்கு தவெக அரசாங்கம் பொறுப்பேற்பதோடு உரிய விளக்கமும் அளிக்க வேண்டும்.

நிர்வாகத் தோல்விக்கு பெரும் சான்று

சம்பந்தப்பட்ட அமைச்சர் மேற்கொள்ளும் பெயரளவு ஆய்வுகளோ அல்லது வெறும் உறுதிமொழிகளோ ​​மட்டும் இந்த விவகாரத்தில் போதாது. எந்தவொரு அரசாங்கமும் செய்ய வேண்டிய அடிப்படைப் பொறுப்பான சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் தவெக அரசாங்கம் தனது குறைந்தபட்சத் திறமையையாவது நிரூபிக்கும் வரை, தேனி சிறை உடைப்பு சம்பவம் அதன் நிர்வாகத் தோல்விக்கு பெரும் சான்றாகவே இருக்கும்.

புழல் சிறையில் இருந்து தப்பிய கைதிகள்

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், பாலியல் வழக்கில் திருமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதேபோன்று நேபாளத்தைச் சேர்ந்த சுதிர் போகத் என்பவர் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்தார். இவர்கள் இருவரும் புழல் சிறையில் இருந்து தப்பியோடிய னிலையில், 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே, புழல் சிறையில் கைதிகள் தப்பிய சம்பவத்தின் எதிரொலியாக, தமிழ்நாடு முழுவதும் சிறைகளில் பாதுகாப்பு தணிக்கை நடத்த சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். இந்த சூழலில் தமிழகத்தில் சிறைகள் ஒரே மாதத்தில் இரண்டு முறை தப்பியோடிய சம்பவம் மக்களை பீதியடைய வைப்பதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

Source link