தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை நிலையங்களில் பணப் பரிவர்த்தனைகளைக் குறைத்து, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகம் (டாஸ்மாக்) திட்டமிட்டுள்ளது. இதன்படி, வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் ஒரே முறை ரூ.1,000-க்கு மேல் மதுபானம் வாங்குபவர்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த வேண்டும். தொடர்ந்து, 2027 ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த வரம்பு ரூ.500-ஆகக் குறைக்கப்பட உள்ளது. இதனால், அதிக மதிப்பிலான மதுபானக் கொள்முதல்களுக்கு வாடிக்கையாளர்கள் யுபிஐ (UPI), வங்கி அட்டைகள் உள்ளிட்ட மின்னணு பணப்பரிவர்த்தனை முறைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் சுமார் 4,048 டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் இந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மதுபான விற்பனையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது, பணக் கணக்குகளில் ஏற்படும் முரண்பாடுகளைத் தடுப்பது, விற்பனை வருவாயைக் கண்காணிப்பது மற்றும் மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விலையைவிட (MRP) கூடுதலாகப் பணம் வசூலிக்கப்படுவதாக எழும் புகார்களைக் கட்டுப்படுத்துவது ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும்.
இதற்காக, அனைத்து விற்பனை நிலையங்களிலும் அதிகாரப்பூர்வ வங்கியுடன் இணைக்கப்பட்ட பாயிண்ட் ஆஃப் சேல் (PoS) இயந்திரங்கள் இருப்பதை உறுதிசெய்யுமாறு மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இயந்திரம், இணைய இணைப்பு அல்லது சர்வரில் கோளாறு ஏற்பட்டால், அதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட நேரம் மற்றும் கோளாறின் கால அளவையும் முறையாகப் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், விற்பனைத் தொகையை ஊழியர்களின் தனிப்பட்ட யுபிஐ கியூஆர் குறியீடுகள் அல்லது வங்கிக் கணக்குகள் மூலம் பெறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத கணக்குகள் வாயிலாகப் பணம் பெறும் ஊழியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மதுபானம் வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் விற்பனை ரசீது வழங்கப்பட வேண்டும் என்றும், ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையைவிடக் கூடுதலாக வசூலிக்கக் கூடாது என்றும் டாஸ்மாக் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. பணப்பரிவர்த்தனை விதிமுறைகள் குறித்த அறிவிப்புகளையும், புகார்களைத் தெரிவிப்பதற்கான 1800 889 2015 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் கடைகளில் காட்சிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைன் மதுபான முன்பதிவு வசதியைப் பயன்படுத்தி மின்னணு முறையில் பணம் செலுத்திவிட்டு, தேர்ந்தெடுத்த கடையில் பொருட்களைப் பெற்றுக்கொள்ளவும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற அறிவுறுத்தல்கள் முழுமையாகச் செயல்படுத்தப்படாத நிலையில், புதிய விதிமுறைகள் எந்த அளவுக்குக் கடைப்பிடிக்கப்படும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
