தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் இரவு நேரத்தில் தப்பி ஓடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தற்பொழுது வரை நான்கு பேர் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள சிறைவாசிகளை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தேனி மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கி உள்ளது. காரணம் தமிழகத்திலேயே முதல் முறையாக 17 கைதிகள் ஒரே நேரத்தில் சிறையில் இருந்து தப்பிய இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், ”சிறையின் ஒரே பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த 17 விசாரணைப் கைதிகள், திட்டமிட்டபடி நள்ளிரவில் திடீரென தங்களுக்கு கடுமையான வலிப்பு வந்தது போலவும், மயக்கம் போட்டு விழுந்தது போலவும் நடித்து ஒரு பெரும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். கைதிகளின் இந்த அலறல் சத்தத்தைக் கேட்டு நிலைமையை ஆராய உள்ளே சென்ற சிறை வார்டன்களை, அந்த கைதிகள் கூட்டமாகச் சேர்ந்து எதிர்பாராத நேரத்தில் மிகக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கினர்.
தொடர்ச்சியாக மூன்று சிறை காவலர்களை நிலைகுலையச் செய்யும் அளவுக்கு கடுமையாகத் தாக்கிவிட்டு, தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு 17 கைதிகளும் சிறை வளாகத்திலிருந்து தப்பியோடினர். இந்த அதிர்ச்சித் தகவல் வெளியான அடுத்த நிமிடமே ஒட்டுமொத்த காவல் துறையும் அலர்ட் செய்யப்பட்டு, மாவட்டத்தின் அனைத்து எல்லைகளிலும் நள்ளிரவு முதலே அதிரடித் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது.
இரவு முழுவதும் விடிய விடிய நடத்தப்பட்ட இந்த தீவிர வேட்டையின் பலனாக, தப்பியோடிய 17 பேரில் 4 கைதிகளைப் போலீசார் செக் போஸ்ட்களில் வளைத்துப் பிடித்துக் கைது செய்துள்ளனர். ஆனால், எஞ்சிய 13 கைதிகளைப் பிடிக்க எல்லையோரப் பகுதிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பக்கத்து மாநிலமான கேரளாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள அனைத்து செக் போஸ்ட்களிலும், அடர்ந்த வனப்பகுதிகளிலும் ஆயுதம் ஏந்திய போலீசார் மற்றும் தனிப்படையினர் இறங்கியுள்ளனர். இவ்வளவு பெரிய சிறையில் எப்படி இந்த அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்ய தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் ஐஜி ஆகியோர் நேரடியாக தேனி மாவட்ட சிறைக்கு விரைந்து தீவிர விசாரணை மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்” என்றார்.
