‘இதை பழிவாங்கல் நடவடிக்கை என்று சொல்வது வெட்கக்கேடானது’-அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி

தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கும் அதிரடி திருப்பமாக, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ”ஒரு சாதாரண சான்றிதழைத் தருவதற்கு கூட, பல கிறிஸ்டியன் மிஷனரிகள், என்ஜிஓக்கள் மற்றும் பல்வேறு அறக்கட்டளைகள் நடத்தி வரும் ஆயிரக்கணக்கான பள்ளிகளை மிரட்டிப் பணம் பறித்திருப்பது மிகக் கேவலமான செயல் . சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிகுலேஷன் என 2000-க்கும் மேற்பட்ட பள்ளிகளிடம் இந்த ஒரே சான்றிதழுக்காக ஒரு வருடத்தில் மட்டும் 400 கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் பழிவாங்கல் நடவடிக்கை என்று அறிக்கை விடுவது வெட்கக்கேடானது. தவறு செய்தவர்கள் நீதிமன்ற விசாரணையை நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும்.

நீதிமன்றத்திற்கு வெளியே செந்தில் பாலாஜி மற்றும் அன்பில் மகேஷின் ஆதரவாளர்கள் ஒன்று கூடி, இவர்களை கரூரிலேயே முடித்திருக்க வேண்டும் என்று கோஷமிட்டது, அவர்களின் முன்கூட்டிய திட்டமிடலையும் சட்டத்தின் மீதான பயமின்மையையும் காட்டுகிறது. திமுக ஆட்சிக் காலத்தில் சாட்சி சொல்ல வருபவர்களின் நிலைமை என்னவாகும் என்பதற்கு அண்ணாநகர் ரமேஷ் முதல் 2ஜி ஊழல் வழக்கு வரை காணாமல் போன பலரின் பட்டியலே சாட்சி. எனவே குற்றவாளிகளை உடனடியாகக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மிகச் சரியானது” என்றார்.