தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் இரவு நேரத்தில் தப்பி ஓடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தற்பொழுது வரை நான்கு பேர் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள சிறைவாசிகளை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தேனி மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கி உள்ளது. காரணம் தமிழகத்திலேயே முதல் முறையாக 17 கைதிகள் ஒரே நேரத்தில் சிறையில் இருந்து தப்பிய இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மாவட்ட சிறைச்சாலையில் இருந்த கைதிகள் காவலர்களை கூண்டோடு தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். நேற்று இரவு முழுவதும் தேனி மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் இவர்களைப் பிடிக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதில் மதுரையைச் சேர்ந்த பிரவின் என்ற கைதி நேற்று இரவே கைது செய்யப்பட்டான். அதனைத் தொடர்ந்து ஆண்டிப்பட்டி அருகே சிலம்பரசன் என்ற கைதியையும் போலீசார் கைது செய்திருந்தனர்.
தொடர்ந்து ராஜா சிக்கந்தர், ராஜ்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் தப்பி ஓடிய 17 கைதிகளில் மொத்தம் நான்கு பேர் தற்போது வரை பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள நபர்களை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் தேனியில் சிறை கைதிகள் தப்பிய விவகாரத்தில் சிறைக் காவலர்களை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
