சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க 100 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்ட புகாரில், திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ், விசாரணைக்குப்பின் நள்ளிரவில் புழல் சிறையில் அடைத்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: பள்ளிக் கல்வித்துறை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டின் அடிப்படையில், பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
கடந்த 2023ம் ஆண்டு, நாங்கள் திமுக பைல்ஸ் வெளியிட்டபோது, தமிழகத்தில் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடு தொடர்பாக நாம் எழுப்பிய கேள்விகளுக்கு அன்றைய திமுக அரசு உரிய விளக்கம் அளிக்கவில்லை.
அந்த முதலீடும் தமிழகத்துக்கு வரவில்லை, முறைகேடான முதலீடு என்ற எங்கள் குற்றச்சாட்டுக்கும் இன்றுவரை பதில் இல்லை. மகேஷ் தொடர்பான உதயநிதி பெயரிலான அறக்கட்டளை, நோபல் பிரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே முகவரியில் இயங்கி வந்ததாகக் கூறப்பட்ட தகவலுக்கும் இன்று வரை பதில் இல்லை.
நோபல் பிரிக்ஸ் நிறுவனத்திற்கும் உதயநிதி அறக்கட்டளைக்கும் இடையே என்ன தொடர்பு? அந்த நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடு தொடர்பான கேள்விகளுக்கு என்ன பதில்? தவெக அரசு வெளிப்படையான விசாரணை நடத்தி, உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
