தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்புச் சான்றிதழ் வழங்வதில் ரூ.400 கோடிக்கு மேல் மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டில் தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு நீதிமன்றம் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது கைவசம் உள்ள 3 முக்கியக் கோப்புகளில் ஒரே ஒரு கோப்பை மட்டுமே தற்போது திறந்துள்ளதாகவும், இன்னும் 2 கோப்புகள் மீதமிருப்பதாகவும் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், தன்னுடைய மேசையில், கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல் முறைகேடுகள் குறித்து 3 கோப்புகள் இருப்பதாகவும் அதை எப்போது திறக்க வேண்டுமோ அப்போது திறப்பேன் என்று கூறியிருந்தார்.
மேலும், தமிழக அரசின் பணத்தை ஒரு பைசா கூட யாரையும் தொட விடமாட்டேன், தொட்டவர்களையும் விட மாட்டேன் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் உறுதியாக கூறி வருகிறார். இதற்கு தி.மு.க தரப்பில், அந்த கோப்புகளை திறங்கள், சும்மா பூச்சாண்டி காட்டாதீர்கள் என்று சமூக ஊடகங்களில் பதிலடி கொடுக்கப்பட்டு வந்தது.
இதனிடையே, தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தி.மு.க-வைச் சேர்ந்த பி.டி. அரசகுமார் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, தி.மு.க ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “ஒரு ஃபைல் விஜய் ஓபன் பண்ணியதால அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னும் 2 ஃபைல் இருக்கிறது” என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கோவையில்அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சார்பாக செய்த ஊழல் சம்பந்தமாக, அவர் வாங்கிய பார்ட்டி ஃபண்டு சம்பந்தமாக நேற்று இரவு கைது செய்யப்பட்டு, இரவு ஒன்றரை மணிக்கு ரிமாண்ட் செய்யப்பட்டார்.
அதாவது ஒரு விஷயம் நாங்கள் திரும்ப சொல்கிறோம். இவர்கள் (தி.மு.க) பார்ட்டி ஃபண்டு ஃபைல் எங்கே என்று கேட்டுக்கொண்டு இருந்தார்கள். ஒரே ஒரு ஃபைல், அந்த ஒரு ஃபைலை ஓபன் பண்ணதுக்கே முன்னாள் அமைச்சர், அதுவும் பார்ட்டி ஃபண்டுல 400 கோடிக்கு மேல வசூல் செஞ்ச ஒரு அமைச்சர் வந்து கைது செய்யப்பட்டு இருக்கிறார். இது தி.மு.க-வுக்கு ஒரு மிகப்பெரிய ஒரு அவமானம்.
ஏனென்றால், தி.மு.க கை வைக்காத இடமே கிடையாது. ஆனால், ஒரு பள்ளி குழந்தைகளுடைய பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்ட ஒரு சான்றிதழில், பார்ட்டி ஃபண்டு வாங்கி இருக்கிறார்கள்.
பார்ட்டி ஃபண்டு என்றால் என்ன என்று பொதுமக்கள் கேட்கிறார்கள். ஒன்னுமில்லை ஒரு சான்றிதழ். குழந்தைகளுடைய பாதுகாப்புக்காக பள்ளி கல்வித்துறை சார்பா கொடுக்கிற ஒரு சான்றிதழில் 400 கோடி ரூபாய் அளவுக்கு, அதுவும் என்.ஜி.ஓ-க்கள், பல கிறிஸ்துவ மிஷனரிகள், பல என்.ஜி.ஓ-க்கள், பல டிரஸ்ட்டுகள் நடத்துற பள்ளிகளை கூட மிரட்டி இவர்கள் பணம் பறித்திருக்கிறார்கள், இதுதான் குற்றச்சாட்டு.
இப்போதுதான் தைரியமா பல பள்ளிகள் வந்து புகார் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள், இன்னும் நிறைய ஆயிரக்கணக்கான பள்ளிகள் இருக்கிறது. ஒரு சி.பி.எஸ்.இ பள்ளிகள் 2000 பள்ளிகளுக்கு மேல் இருக்கிறது. மற்ற மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இருக்கிறது, என்.ஜி.ஓ-க்கள் நடத்துற பள்ளிகள் இருக்கிறது. இவர்கள் விட்டுவைக்காத பள்ளிகள் எதுவுமே கிடையாது.
எல்லா பள்ளிகளிலும் இப்போதுதான் தைரியமாக வந்து புகார் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்கள் எல்லா பள்ளிகளையும் மிரட்டி பல மிஷனரிகள், பல பள்ளிகள், என்.ஜி.ஓ-க்கள் நடத்துற பள்ளிகள் அனைத்தையும் மிரட்டி பணம் பறித்திருக்கிறார்கள். இது ஒரு சான்றிதழ், யாருக்காவது தெரியுமா இந்த மாதிரி சான்றிதழ் இருக்கிறது என்று தெரியுமா? பள்ளி நடத்துகிறவர்களைத் தவிர்த்து வேற யாருக்குமே இந்த மாதிரி ஒரு சான்றிதழ் இருக்கிறது என்பதே தெரியாது.
இந்த ஒரு சான்றிதழில் 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்திருக்கிறார்கள். ஒரே வருடத்தில் ஒரு சான்றிதழில் 400 கோடி அளவுக்கு வசூல் என்றால், மற்ற எல்லா துறைகளிலும் எவ்வளவு இருக்கும் பாருங்கள். இது பள்ளிக் கல்வித் துறையில் அனுமதி கொடுக்கிறதில் என்றால் எல்லாவற்றிலும் கணக்கிட்டு பாருங்கள்.
இதே முன்னாள் துணை முதலமைச்சர்’ஃபைல் ஓபன் பண்ணுங்க, 3 ஃபைல் இருக்கிறதே, ஓபன் பண்ணுங்க ஓபன் பண்ணுங்க’ என்று கேட்டார்கள்? ஒரே ஒரு ஃபைலை தான் இப்போதைக்கு முதலமைச்சர் ஓபன் பண்ணி இருக்கிறார். இந்த ஒரு ஃபைலுக்கே இவ்வளவு பெரிய டிராமா பண்ணி, கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல், ஸ்டாலின், இது வந்து பழிவாங்கும் நடவடிக்கை என்று நேற்று அறிக்கை கொடுக்கிறார்.
நீங்கள் இதற்கு கண்டிப்பாக வெட்கப்பட வேண்டும். குழந்தைகளுடைய பாதுகாப்புக்கான சான்றிதழில்கூட நீங்கள் திருட்டுத்தனம் பண்ணி, அதுல போலி சான்றிதழ் கொடுப்பதற்காக, அதில் பணம் பறிக்கிறதுக்காக, பள்ளிகளை மிரட்டி பணம் பறித்து இருக்கிறீர்கள்.
இந்த மாதிரி விஷயத்டில் ஜாமீன் வாங்க போகாமல், நேர்மையாக விசாரணையையும் கோர்ட்ல இருக்குற விசாரணையையும் எதிர்கொள்ள வேண்டும்.” என்று அமைச்சர் நிர்மல் குமார் காட்டமாகப் பேசியுள்ளார்.
