வில்லனாக நடிப்பது குறித்தான கேள்விகளுக்குப் பதிலளித்த சிவகார்த்திகேயன் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் 11-வது ஆண்டு விழா நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவரிடம் திரை வாழ்க்கை அனுபவங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அவர் மனம் திறந்து பதிலளித்தார். அப்போது, அவரிடம் வில்லனாக நடிப்பீர்களா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த சிவகார்த்திகேயன், “வில்லனாக நடிப்பது குறித்து நானே யோசித்தது கிடையாது. என்னுடைய நோக்கம் எல்லாம் மக்களை மகிழ்விப்பது தான். மக்கள் என்னை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதனால், எல்லோரும் ரசிக்கும்படியான படங்களைச் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். ஏற்கனவே வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், அதை நான் நிராகரித்துவிட்டேன். அதனால், வில்லனாக நடிக்கமாட்டேன் என்று பொருள் இல்லை.
கலகலப்பான வில்லனாக நடிக்கும் பாத்திரமோ அல்லது இரட்டை வேடங்களில் ஒன்று வில்லனாக இருந்தால் நடிக்க முயற்சிக்கலாம்” என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இணைய வாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில், சிலர் சிவகார்த்திகேயன் வில்லனாக நடிக்கத் தயாராகிவிட்டார் என்றும் பதிவிட்டு வருகின்றனர். மேலும், சிலர் ஏன் இந்த திடீர் முடிவு? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
