சென்னை: வெண்ணெய், நெய் உள்ளிட்ட பால் பொருள்களின் விலை உயர்வை திரும்பப் பெறுமாறு ஆவின் நிறுவனத்திற்கு அரசு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை நிறுவனமான ஆவின் மூலம் விற்பனை செய்யப்படும் வெண்ணெய், நெய் உள்ளிட்ட 63 வகையான பொருள்களின் விலைகள் உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் தமிழக மக்கள் தவித்து வரும் நிலையில், ஆவின் நிறுவனமும் அதன் பங்குக்கு விலைகளை உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 100 கிராம் ஆவின் நெய் பாட்டில் ரூ.10 உயர்ந்து ரூ.95 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் நெய் ரூ.80 உயர்ந்து ரூ.770 ஆக அதிகரித்துள்ளது. அரைலிட்டர் நெய் ரூ.30 உயர்ந்து ரூ.390 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரு லிட்டர் நெய்யின் விலை குறைந்தது ரூ.80 முதல் அதிகபட்சமாக ரூ.100 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 100 கிராம் வெண்ணெய் ரூ.10 உயர்ந்து ரூ.70 ஆகவும், அரை கிலோ வெண்ணெய் விலை ரூ.45 உயர்ந்து 320 ஆகவும் அதிகரித்துள்ளது.
இந்த வகையில், வெண்ணெய் விலை கிலோவுக்கு ரூ.90 முதல் ரூ.100 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இவை தவிர, பால் பவுடர், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பொருள்களின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. ஏழை மக்கள் அருந்தும் 200 மிலி மோரின் விலையும் ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏழை மக்கள் மீதான தாக்குதலாகும்.
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதி ஆவின் பால் விலைகள் பல ஆண்டுகளாக உயர்த்தப்பட வில்லை என்று பரப்புரை செய்து வரும் ஆவின் நிறுவனம், கடந்த ஆட்சியில் கொழுப்புச் சத்து குறைந்த புதிய பால் வகையை அறிமுகம் செய்து மறைமுகமாக விலையை உயர்த்தியுள்ளது.
இன்னொருபுறம் வெண்ணெய், நெய் உள்ளிட்ட பொருள்களின் விலையை ஆவின் நிறுவனம் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் மட்டும் ஆவின் பால் அல்லாத பிற பொருள்களின் விலைகள் 5 முறை உயர்த்தப்பட்டன.
ஆவின் நெய் விலை மட்டும் கடந்த ஐந்தாண்டுகளில் லிட்டருக்கு ரூ.225, அதாவது 44% வரை உயர்த்தப்பட்டது. மக்களுக்கு மாற்றத்தை வழங்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தவெகவும் அதே வழியைத் தான் பின்பற்றி வருகிறது.
2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.70 முதல் ரூ.100 வரை உயர்த்தப்பட்டது. இப்போது அதை விட அதிகமாக ரூ.80 முதல் ரூ.100 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது விலைவாசி உயர்வை முன்வைத்து பரப்புரை மேற்கொண்ட விஜய் , இப்போது அதே விலைவாசி உயர்வையே மக்களுக்கு பரிசாகக் கொடுத்திருக்கிறார். இதுதான் அவர் வாக்குறுதி அளித்த மாற்றமா? என மக்கள் வினா எழுப்புகின்றனர்.
கடந்த ஜூலை மாதம் முதல் இப்போது வரை அரிசி விலை கிலோவுக்கு ரூ.40 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அரிசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 3 முறை நான் வலியுறுத்தினேன். இதற்காக சன்னரக அரிசியை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தேன்.
அதைத் தொடர்ந்து ரூ.30 என்ற விலையில் சன்னரக அரிசி மக்களுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அந்த அரிசி எங்கு வழங்கப்படுகிறது என்பது தெரியவில்லை.
தமிழ்நாட்டில் மொத்தம் 250 முதல் 260 அமுதம் அங்காடிகளில் சன்ன ரக அரிசி வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2.35 கோடி குடும்பங்கள் உள்ளன. அவர்களுக்கு நியாயவிலையில் பொருள்களை வழங்க மாநிலம் முழுவதும் 38,438 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
ஆனால், தமிழக அரசு வெறும் 260 அமுதம் அங்காடிகள் மூலம் சன்ன ரக அரிசி வழங்குவதாகக் கூறுகிறது. இது நியாயவிலைக் கடைகளின் எண்ணிக்கையில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவு. இந்த அளவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான அங்காடிகள் மூலம் சன்ன ரக அரிசி வழங்குவதன் மூலம் அரிசி விலையை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்?
தமிழகத்தின் ஏழை மற்றும் நடுத்தர மக்களை விலைவாசி மிகக் கடுமையாக பாதித்திருக்கிறது. கொழுந்து விட்டெரியும் அந்தத் தீயை அவிப்பது தான் தமிழக அரசின் முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும்.
அதற்கு மாறாக தமிழக அரசும் அதன் பங்குக்கு ஆவின் பால் பொருள்களின் விலைகளை உயர்த்துவது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதாகத் தான் அமையும். எனவே, வெண்ணெய், நெய் உள்ளிட்ட பால் பொருள்களின் விலை உயர்வை திரும்பப் பெறுமாறு ஆவின் நிறுவனத்திற்கு அரசு ஆணையிட வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
