அசிங்கமா போச்சு குமாரு… பின்தொடர்வோர் 21 லட்சம் பேர்; கிடைத்த ஓட்டு 33 மட்டுமே!

-நமது சிறப்பு நிருபர்-

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் பிஷ்னோய் ஜோதிடராகவும், யூடியூபராகவும் மற்றும் இன்ப்ளூயன்சராகவும் மிகவும் பிரபலமானவர். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 14 லட்சம், பேஸ்புக்கில் 2.32 லட்சம் மற்றும் யூடியூபில் 5 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

அதாவது, மொத்தம் 21 லட்சம் பேர் இவரை பின்தொடர்கின்றனர். இணையத்தில் தனக்கிருக்கும் பெரும் செல்வாக்கை மலை போல் நம்பியிருந்த அவருக்கு, நிஜ உலக தேர்தல் களம் முற்றிலும் மாறுபட்ட ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது.

ஜோத்பூர் மாவட்டம் ஓசியன் தாலுகாவில் உள்ள கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு இவர் போட்டியிட்டார். இந்த கிராமத்தில் மொத்தம் 1,600 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், இவருக்கு வெறும் 33 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்தன.

வேடிக்கை என்னவென்றால், அந்த 33 ஓட்டுக்களில் 11 ஓட்டுக்கள் அவருடைய குடும்பத்தினர் உடையது. சமூக ஊடகங்களில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு போன்ற தலைப்புகளில் பல்வேறு வீடியோக்களை பகிர்ந்துள்ளார். சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கானோர் தன்னை ஆதரித்தாலும், சொந்த கிராம மக்களின் ஆதரவைப் பெறத் தவறிவிட்டதாகக் கூறி ஓம்பிரகாஷ் பிஷ்னோய் தனது தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இணையத்தில் கிடைக்கும் ‘லைக்ஸ்’ மற்றும் பார்வையாளர்கள் ஒருபோதும் நிஜ உலகில் ஓட்டாக மாறாது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.

சமூகவலைதள செல்வாக்கு நம்பி தேர்தலில் களம் காணுவது குறித்து தங்களது கருத்துக்களை கமென்டில் பதிவிடுங்கள் வாசகர்களே!

Source link