சென்னை,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர்களான அல்பி மோர்கல், மோகித் சர்மா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த காரெத் பேட்டி ஆகியோர் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளனர்.
ஜாகீர் கான்
நீண்ட காலமாக சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராகச் செயல்பட்ட ஸ்டீபன் பிளெமிங், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றதைத் தொடர்ந்து, சிஎஸ்கே அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டார்.
பழைய பயிற்சியாளர் குழுவில் மாற்றம்
இதைத்தொடர்ந்து, சிஎஸ்கே அணியின் நீண்டகால பேட்டிங் பயிற்சியாளரான மைக்கேல் ஹஸ்ஸி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ், உடற்தகுதிப் பயிற்சியாளர் கிரெக் கிங் மற்றும் பிசியோதெரபிஸ்ட் டாமி சிம்செக் ஆகியோர் அணியிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டனர்.
புதிய பயிற்சியாளர் குழுவை அமைக்கும் பொறுப்பு ஜாகீர் கானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் வீரர்களான அல்பி மோர்கல், மோகித் சர்மா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த காரெத் பேட்டி ஆகியோர் அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளனர்.
அல்பி மோர்கல்
தென் ஆப்பிரிக்க முன்னாள் ஆல்ரவுண்டரான அல்பி மோர்கல், 2008 முதல் 2013 வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடினார். அந்த காலகட்டத்தில் 78 போட்டிகளில் பங்கேற்று 827 ரன்கள் எடுத்ததுடன், 76 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
பின்னர் தென் ஆப்பிரிக்காவின் எஸ் ஏ 20 தொடரில் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டார். தற்போது உதவி பயிற்சியாளராக சிஎஸ்கே அணியுடன் பணியாற்ற உள்ளார்.
மோகித் சர்மா
இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மோகித் சர்மாவும் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இணைந்துள்ளார். அவர் 2013 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி, 48 போட்டிகளில் 58 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற மோகித் சர்மா, தற்போது பயிற்சியாளர் பொறுப்பில் புதிய பயணத்தைத் தொடங்குகிறார்.
இங்கிலாந்தின் காரெத் பேட்டி
இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான காரெத் பேட்டி, பயிற்சியாளராகவும் அனுபவம் பெற்றவர். சர்ரே அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றிய அவர், அந்த அணி தொடர்ந்து மூன்று கவுண்டி சாம்பியன்ஷிப் பட்டங்களை வெல்ல உதவினார்.
அவரது அனுபவம் சிஎஸ்கே அணியின் பயிற்சித் திட்டங்களுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
