“பணம் கொடுப்பது மட்டும்தான் லஞ்சமா?" – தவெக அரசைச் சாடும் சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவங்கங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பித்தது குறித்த செய்திக்குச் சிரிப்புதான் வருகிறது. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது விவகாரத்தைத் தவறு எனக் கூறமுடியாது. ஏனென்றால் கடந்த கால ஆட்சிகளிலும் ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லாமல் இல்லை.

எனவே, துறை சார்ந்த விசாரணைகள் மூலமே அதற்கான உண்மைகள் வெளிவரும். பணமாகக் கொடுப்பது மட்டுமே லஞ்சமல்ல. தேர்தலுக்காக அரசுப் பணத்தில் இருந்து வழங்கப்படும் தாலிக்குத் தங்கம், சீர்வரிசைப் பொருட்கள், இலவச சிலிண்டர் போன்றவைகளும் ஒருவகை ‘வார்த்தை லஞ்சம்’தான்.

வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதே அரசின் கடமையே தவிர, மாத உதவித்தொகையாக ரூ.4000 தருவது லஞ்சம் தானே.

அன்பில் மகேஸ்

மேலும், அரசுக்கு வருவாய் தரக்கூடிய பேருந்துப் போக்குவரத்து போன்ற துறைகளில் இலவசங்களை வழங்கிவிட்டார்கள். அதனால் அரசுக்கு நிதிச் சுமை கூடத்தானே செய்யும். சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் மார்ட்டினிடம் ரூ.9 ஆயிரம் கோடி நிதி பெற்றது திமுக எனப் பேசினார். அவர் ஏன் கொடுத்தார்? இவர் ஏன் வாங்கினார் என அவையில் இருந்த யாரும் கேள்வி எழுப்பவில்லை. தொழிலதிபர்களிடம் இருந்து பெறப்படும் பெரும் தொகைகள் எந்த நோக்கில் வாங்கப்படுகின்றன கொடுக்கப்படுகின்றன? இதற்கு பதில் இருக்கிறதா?

விமான எரிபொருளுக்கான (VAT) வரியைக் குறைப்பதால் சாமானிய மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அது ஏகபோக தனியார் நிறுவனங்களுக்கே லாபமாக அமைகிறது. ஆனால், அரிசி, பருப்பு, பால், சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும், மின் கட்டணமும் பல மடங்கு உயர்ந்து மக்களுக்குச் சுமை அதிகரித்துள்ளது. இது குறித்து அரசு கவலைப்படவில்லை. அதேவேளையில், உள்ளூர் ஆவின் பால் உற்பத்தியைப் புறக்கணித்துவிட்டு வெளிமாநிலப் பால் நிறுவனங்களை நம்பியிருக்கும் நிலை உருவாகி, அரசின் சொந்த வருவாய் வழிகள் முழுவதுமாக அடைக்கப்படுகிறது.

வெற்றிப் பயணத் திட்டம் - முதல்வர் விஜய்
வெற்றிப் பயணத் திட்டம் – முதல்வர் விஜய்

கடந்த 60 ஆண்டுகால திராவிட ஆட்சிகளில் மின் உற்பத்தியில் முதலீடு செய்யாமல், மின்சாரத்தை வெளியில் இருந்து அதிக விலைக்கு வாங்குவதிலேயே ஆர்வம் காட்டப்பட்டது. ஏனென்றால் உற்பத்தியை விட வெளியிலிருந்து வாங்கும்போது கமிஷன் கைமாறுவதே இதற்குக் காரணம்.

அதானியின் சூரிய ஒளி மின்பூங்கா போன்ற திட்டங்களுக்கு தனியார் முதலீடு செய்யும்போது, தமிழ்நாடு அரசு ஏன் கடன் வாங்கியாவது மின் உற்பத்தியில் சொந்தமாக முதலீடு செய்யக்கூடாது? உற்பத்தியில் முதலீடு செய்திருந்தால் மாநிலம் மின்மிகை மாநிலமாக மாறியிருக்கும்.

ஆனால், அதைச் செய்யாமல் கமிஷனுக்காக கொள்முதலையே நம்பியிருக்கிறார்கள். ரூ.35-க்கு மின்சாரத்தை வாங்கி அந்தத் தொகையை மக்களிடம்தான் கட்டணம் மூலம் வசூலிப்பார்கள். திமுக முதல் தவெக வரை எந்தக் கட்சியாக இருந்தாலும், அவர்கள் வழங்கும் வாக்குறுதிகளில் தொகைகளும் சிலிண்டர்களின் எண்ணிக்கைகளுமே மாறுகிறதே தவிர, அடிப்படை ஆட்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை.

பழைய திராவிடக் கட்சிகளின் வரிசையில் புதிய கட்சிகளும் அதே இலவச அரசியலையே முன்னெடுப்பதால், இங்கு ஆட்களும் பெயர்களுமே மாறுகிறதே தவிர, மக்களுக்கான உண்மையான மாற்று அரசியல் நிகழவில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link