கரூர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் பழைய நிர்வாகிகள் வெளிப்படையாகக் கொந்தளித்ததும், உள்ளாட்சித் தேர்தல் பதவி விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆடியோவும் கரூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி பெரிய பாலத்திற்கு அருகில் உள்ள தனியார் காம்ப்ளக்ஸில் தான் கரூர் கிழக்கு மாவட்ட தவெக அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி தலைமையில் புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்குத் தாமதமாக வந்த மாவட்டச் செயலாளர், பல ஊர்களில் திருமண நிகழ்ச்சிகள் இருந்ததால் வருவதற்குத் தாமதமானது என்று விளக்கம் அளித்தார். தொடர்ந்து, மாநிலப் பொதுச்செயலாளரின் ஒப்புதலைப் பெற்று புதிய நிர்வாகிகள் பட்டியலை வாசித்தார். அதில், மாவட்ட இணைச் செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
மேலும், நீக்கப்பட்ட நிர்வாகிகளுடன் கட்சியினரும் தொண்டர்களும் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார். இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில், நீக்கப்பட்டதாகக் கூறப்படும் மாவட்ட இணைச் செயலாளர் சதாசிவம், குளித்தலை மேற்கு நகர செயலாளர் விஜய் மற்றும் 25-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்தனர். “எங்களை நீக்கியதற்கான காரணம் என்ன? மாநிலப் பொதுச்செயலாளர் அறிவித்த உண்மையான பட்டியலைக் காட்டுங்கள்” என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அதிருப்தி நிர்வாகிகள் ஆவேசமாகப் பேசுகையில், “தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துவிட்டு தலைமை மீது பழிபோடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. விஜய் மக்கள் இயக்கமாக இருந்த காலத்திலிருந்து, கட்சித் தொடங்கிய காலத்திலிருந்தும் பல ஆண்டுகளாக நாங்கள் உழைத்திருக்கிறோம். எங்களை ஒருபோதும் தலைமை நீக்கியிருக்காது. உங்களுடைய சுயநலத்திற்காகவும், வருமானத்திற்காகவும் நீங்கள் எடுக்கும் முடிவுகளை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம்” என்று முழங்கினர். கூட்ட அரங்கிலேயே மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணிக்கு எதிராக அவரது எதிர்ப்பாளர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் அலுவலகத்திலிருந்து வெளியேறிச் சென்றனர்.
இந்த மோதலின் பரபரப்பு அடங்குவதற்குள், தவெக கிழக்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியினுடையது என்று கூறப்படும் ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவி வருகிறது. அந்த ஆடியோவில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அல்லது பதவிகளைப் பெற நிர்வாகிகளிடம் 15 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை ஏலம் கோரப்படுவதாகவும், அதற்கான குலுக்கல் முறையில் சீட்டு எடுக்கும் நிகழ்வு மாநிலப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் நடைபெறும் என்றும் பேசப்பட்டுள்ளது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் தகவல் தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்சித் தொடக்கக் கட்டத்திலேயே கரூரில் அரங்கேறியுள்ள இந்த உட்கட்சி மோதலும், பதவி ஏலம் தொடர்பான ஆடியோ சர்ச்சையும் தவெக தலைமைக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
