அன்னிய முதலீட்டாளர்களின் மிக கடுமையான விற்பனை போக்கிற்கு இடையிலும், இந்திய சிறு முதலீட்டாளர்களின் மாதாந்திர எஸ்.ஐ.பி., முதலீடுகள் மட்டுமே இந்திய பங்கு சந்தைக்கு மிகப்பெரிய கேடயமாக விளங்கி வருகிறது. வலுவான இந்த எஸ்.ஐ.பி., முதலீடுகள் இல்லாதிருந்தால், இந்திய சந்தை 40 – 50 சதவீதம் வரை சரிந்திருக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
எஸ்.ஐ.பி., முதலீட்டு போக்கு சரிவிலும் இப்படியே தொடருமா, சரிவை கண்டு மக்கள் பயத்தில் எஸ்.ஐ.பி., முதலீட்டை தற்காலிகமாக நிறுத்தினால் என்ன ஆகும் என்பது குறித்தெல்லாம் ‘ஐதாட் பி.எம்.எஸ்.,’ நிறுவனர் ஷியாம் சேகர் விளக்கியதாவது:
இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், மாதாந்திர எஸ்.ஐ.பி., முதலீடுகள் வரலாறு காணாத அளவுக்கு மாதம் தோறும் 33,000 கோடி ரூபாயை தாண்டி சென்றுள்ளன.
சந்தை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும்போது லாபத்தை கண்டு ஈர்க்கப்படும் முதலீட்டாளர்கள், சந்தை இறங்குமுகத்தை காணும்போது நஷ்ட உணர்வு ஏற்பட்டு ‘எஸ்.ஐ.பி.,’ முதலீடுகளை நிறுத்திவிடுவார்களோ என்ற சந்தேகம் சந்தையில் பரவலாக எழுந்துள்ளது.
பயமும், அபாயமும்
புள்ளிவிவரங்களின்படி, எஸ்.ஐ.பி., முறையில் முதலீட்டை தொடங்கும் பலரும், இரண்டு ஆண்டுகளுக்குள் சந்தை மந்தநிலையை கண்டு நம்பிக்கையிழந்து, பாதியிலேயே முதலீட்டை நிறுத்திவிடுவதை வரலாறு காட்டுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சந்தை எதிர்பார்த்த லாபத்தை தராததால், தற்போதும் அதே தவறை முதலீட்டாளர்கள் செய்வார்களோ என்ற அச்சம் நிலவுகிறது.
இங்கு கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எஸ்.ஐ.பி., என்ற முதலீட்டு முறையில் பிரச்னை இல்லை; முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுத்த பண்டுகளில் தான் இருக்கக்கூடும். முறையை குறை கூறுவதை விட்டுவிட்டு, சரியான பண்டுகளை அடையாளம் கண்டு, தங்களின் தேர்வுகளை மாற்றுவதே சரியானதாக இருக்கும்.
கூடுதல் யூனிட்கள்
சந்தை உச்சத்தில் இருக்கும்போது குறைந்த யூனிட்டுகளே கிடைக்கும். ஆனால், சந்தை தொடர்ந்து இறங்குமுகமாக இருக்கும் காலங்களில், அதே மாதாந்திர தொகைக்கு, அதிக எண்ணிக்கையிலான யூனிட்டுகள் நம் கணக்கில் சேரும்.
நீண்ட கால அடிப்படையில் செல்வம் பெருக, இந்த சரிவு காலத்தில்தான் வலுவான அடித்தளம் அமைகிறது. சந்தையின் குறுகிய கால ஏற்ற இறக்கங்களை பார்த்து பதட்டப்படாமல், உங்களது நீண்ட கால இலக்குகளை மனதில் கொண்டு மாதாந்திர எஸ்.ஐ.பி., முதலீட்டை எக்காரணம் கொண்டும் நிறுத்தாமல் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை தொடர்வதே புத்திசாலித்தனம்.
‘காம்பவுண்டிங்’ பலன்
சந்தை மந்தமாக உள்ளது என்பதற்காக பொறுமையிழந்து எஸ்.ஐ.பி., முதலீட்டை பாதியிலேயே நிறுத்திவிட்டால், இதுவரை வளர்த்து வந்த முதலீட்டு ஒழுக்கம் தகர்ந்துவிடும். தவறான நேரத்தில் எடுக்கப்படும் அவசர முடிவுகள் கூட்டு வட்டியின் அற்புத பலன்களை நம் வாழ்வில் கிடைக்காமலேயே செய்துவிடும்.
எஸ்.ஐ.பி., என்கிற முறையில் பொறுமையுடன் பல ஆண்டுகள் முதலீட்டை தொடர்ந்தால், பங்குச்சந்தையின் தற்போதைய சரிவிலிருந்தும் மீண்டு நிச்சயம் பெரிய லாபத்தை ஈட்ட முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரூ. 3.08 லட்சம் கோடி
நடப்பு 2026ஆம் ஆண்டில் இதுவரை எப்.ஐ.ஐ., ெளியேற்றிய தொகை
ரூ. 2.51
லட்சம் கோடி
நடப்பு 2026ன் முதல் 9 மாதங்களில் மட்டும் எஸ்.ஐ.பி., வாயிலாக முதலீடு செய்யப்பட்ட தொகை.
