சென்னை: அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.
மின் வாரியம், நுகர்பொருள் வாணிப கழகம், அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றில் பணிபுரியும், ‘சி, டி’ பிரிவு பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது.
வழக்கமாக, 8.33 சதவீதம் மிகை ஊதியம், 11.67 சதவீதம் கருணை தொகை என, மொத்தம், 20 சதவீதம் போனஸ் தொகை வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக ஒருவருக்கு, 8,400 ரூபாய் முதல், 16,800 ரூபாய் வரை கிடைக்கிறது.இந்தாண்டு நவம்பர் 8ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
லாபம் ஈட்டிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு 20 சதவீதமும்
தமிழக மின் பகிர்மான கழகம், தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள், தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரிபவர்களுக்கு 20 சதவீதமும்
உபரித் தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு 10 சதவீதமும்
தமிழக வீட்டு வசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் , நீரகற்றுவாரியத்தில் பணிபுரிபவர்களுக்கு 10 சதவீதமும்
தமிழக குடிநீர் வழங்கல் வாரியத்தில் பணியாற்றுபவர்களுக்கு 8.33 சதவீத போனஸ் வழங்கப்படும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப தற்காலிக தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கருணைத்தொகையாக வழங்கப்படும்.
நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 மற்றும் அதிகபட்சம் ரூ.16,800 வரை பெறுவர். அரசுக்கு ரூ.367 கோடி செலவாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
