நவம்பர் 1ம் தேதி போராட்டம் நடத்த வேண்டாம், தீபாவளி பண்டிகை சமயத்தில் இந்த போராட்டம் எங்களுக்கு ரூ.10,000 கோடி இழப்பை தரும். எனவே போராட்டத்தை ஒத்தி வையுங்கள் என்று டில்லி வர்த்தகர்கள் ராகுலுக்கு மீண்டும் கடிதம் எழுதி உள்ளனர்.
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது இண்டி கூட்டணியின் கோரிக்கை. இதற்காக நவ.1ம் தேதி தலைநகர் டில்லி ராம்லீலா மைதானத்தில் இண்டி கூட்டணி பேரணி ஒன்றை நடத்துகிறது. இந்த பேரணியில் 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள், 20,000 பஸ்கள் தலைநகருக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை எதிர்கொள்ளும் வகையில், மத்திய டில்லியில் சாலை தடுப்புகள், மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்களை மூடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருவதால் பேரணி நடைபெறும் இடத்தை சுற்றி சுமார் 5 கிமீ பரப்பளவில் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சாந்தினி சவுக், சதர் பஜார், சாவ்ரி பஜார், காஷ்மீர் கேட் ஆகிய பகுதிகளில் இருக்கும் முக்கிய சந்தைகளில் ஒட்டு மொத்த மற்றும் சில்லரை வர்த்தகம் பாதியாக குறைந்துள்ளது. தீபாவளி நேரத்தில் பேரணி நடத்தப்பட்டால் 20 லட்சம் வர்த்தகர்களின் வருமானம் பாதிப்பதோடு, கிட்டத்தட்ட ரூ.10,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று வர்த்தகர்கள் ராகுலை வலியுறுத்தி இருக்கின்றனர்.
தங்கள் கோரிக்கையை முன் வைத்து, வேறொரு நாளில் பேரணி செல்லுங்கள் என்று கூறி ராகுலுக்கு டில்லி வர்த்தக தொழில்சபையினர் கடிதம் ஒன்றை மீண்டும் எழுதி இருக்கின்றனர். டில்லி வர்த்தகத்தில் கடந்த 25 நாட்களில் ஏற்கனவே ரூ.3,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது பேரணியால் ரூ.10,000 கோடி இழப்பை சந்திக்க நேரிடும் என்று கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.
ஏற்கனவே அவர்கள் எழுதிய கடிதத்தை ராகுல் நிராகரித்துவிட்ட சூழலில் இப்போது மீண்டும் இந்த கடிதம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது, குறிப்பிடத்தக்கது.
