சென்னை:
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. சில இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. அதிலும் ஓரிரு இடங்களில் 108 டிகிரி வெயில் கூட பதிவானது.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அடுத்த 2 வாரங்களுக்கு அதாவது 24-ந்தேதி வரை கோடை வெப்பம் தீவிரமாக இருக்கும் எனவும், இயல்பைவிட 2 செல்சியஸ் முதல் 3 செல்சியஸ் வரை உயரும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
அதிலும் குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் 39 செல்சியஸ் முதல் 42 செல்சியஸ் வரை அதாவது 102 டிகிரி முதல் 108 டிகிரி வரை வெயில் பதிவாகக் கூடும் எனவும், அதுவே கடலோர மாவட்டங்களில் 38 செல்சியஸ் வரை அதாவது 100.4 டிகிரி வரை வெயில் பதிவாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த கால கட்டங்களில் தொடர்ச்சியான வறண்ட வானிலையுடன் வெப்பம் அதிகரிப்பதாலும், வெப்பக் காற்று வீசும் என்பதாலும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெப்ப அழுத்தம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும், அனல் காற்றுடன் வெயில் தொடரும் என்றும் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் எச்சரித்துள்ளார்.
அது என்ன வெப்ப அழுத்தம்? என்ற கேள்வி எழலாம். அதாவது, ஒரு மனித உடல் தாங்கக்கூடிய அளவை விட அதிகப்படியான வெப்பத்தைச் சந்திக்கும் போது ஏற்படும் பாதிப்பை குறிப்பதுதான் வெப்ப அழுத்தம். இந்த நேரத்தில் உடன் தன்னைத்தானே குளிர்வித்து கொள்ளும் திறனை இழந்து அதிகளவில் வியர்வை வெளியேறி உடல் சோர்வு ஏற்படும். எனவே அடிக்கடி தண்ணீர் குடிப்பது, தளர்வான, வெளிர் நிறத்திலான உடைகளை அணிவது, எளிதில் செரிமானமாகும் உணவுகள் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவு வகைகளை எடுத்துக் கொள்வது போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
