முல்லைப் பெரியாறு உரிமை மீட்புப் போராளி கம்பம் அப்பாஸ் மரணம்: தலைவர்கள் இரங்கல்

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த மூத்த விவசாய சங்கத் தலைவரும், முல்லைப் பெரியாறு உரிமைப் போராளியுமான கே.எம். அப்பாஸ் (வயது 94) உடல்நலக் குறைவால் காலமானார். தென் மாவட்ட விவசாயிகளின் நலனுக்காகவும், அணை உரிமைகளுக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த அவரது மறைவு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், த.வெ.க எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

தென் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையில், தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தவர் கே.எம். அப்பாஸ். ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தின் முன்னாள் தலைவராகப் பதவி வகித்த அவர், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளுக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டங்களை நடத்தியவர்.

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக்கின் வரலாற்றையும், அணையின் அரசியல் மற்றும் வரலாற்றுப் பின்னணியையும் மக்கள் மற்றும் ஊடகங்களிடம் கொண்டு சேர்ப்பதில் இவர் மிக முக்கியப் பங்காற்றியவர். மேலும், அணையில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகள் மற்றும் அதற்காக நடைபெற்ற போராட்டங்கள் குறித்து பல்வேறு வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். அணை குறித்த உண்மையான தகவல்களைப் பொதுமக்களிடம் கொண்டு செல்வதிலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அவர் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.

கே.எம். அப்பாஸ் மறைவுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், த.வெ.க எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா, ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். 

முல்லைப் பெரியாறு உரிமை மீட்பு போராளி கம்பம் கே.எம். அப்பாஸ் மறைவுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புப் போராளி கம்பம் அப்பாஸ் மறைவுக்கு இரங்கல்.

முல்லைப் பெரியாறு அணை உரிமைக்காகப் பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்திய போராளியும், ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவருமான  கம்பம் கே.எம்.அப்பாஸ் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்பதையறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

சிறந்த எழுத்தாளருமான அப்பாஸ், முல்லைப்பெரியாறு  அணை தொடர்பாக நூல்களையும் எழுதியவர். கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாத் கமிட்டித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதலில் 142 அடியாகவும், பின்னர் 152  அடியாகவும் உயர்த்த வேண்டும் என்ற 2006-ஆம்  ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கோரி கம்பம் கூடலூரில் மருத்துவர் ஐயா அவர்கள் தலைமையில் கொட்டும் மழையில் நடைபெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்.

பெரியவர் கம்பஸ் அப்பாஸ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், முல்லைப் பெரியாறு போராட்டக் குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “முல்லைப் பெரியாறு உரிமைக்காகப் போராடிய கம்பம் கே. எம். அப்பாஸ் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்.

முல்லைப் பெரியாறு அணையின் உரிமைக்காகவும், தமிழக விவசாயிகளின் நலனுக்காகவும் நீண்டகாலமாகக் குரல் கொடுத்து, பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற கம்பம் கே. எம். அப்பாஸ் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.

முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவராகச் செயல்பட்டு, அணையின் உரிமை தொடர்பான பிரச்சினைகளை மக்களிடம் தொடர்ந்து எடுத்துரைத்த அவரது பணி குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் நீருரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்த ஒரு போராளியை நாம் இழந்திருக்கிறோம்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், விவசாயிகள் மற்றும் போராட்டத் தோழர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமைகளுக்காகச் சமரசம் இன்றித் தொடர்ந்து குரல் கொடுத்துவந்த கம்பம் கே.எம். அப்பாஸின் மறைவு, விவசாயிகளிடையேயும் அணை உரிமை மீட்பு போராளிகளிடையேயும் ஈடுசெய்ய முடியாத இழப்பாக அமைந்துள்ளது.

Source link