பனாஜி: கோவாவில் எரிசக்தி தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாட்டை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி துவங்கி வைத்தார்.
அவர் பேசியதாவது: உக்ரைன் போருக்கு முன்பு இந்தியா ரஷ்யாவிடம் இருந்து குறைவான கச்சா எண்ணெய் இறக்குமதியை செய்து வந்தது.
ரஷ்ய எண்ணெய்க்கு வழங்கப்பட்ட தள்ளுபடிகள் காரணமாக போர் துவங்கியதிலிருந்து இறக்குமதி அதிகரித்துள்ளது. ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க அமெரிக்காவிடமிருந்து எந்த அழுத்தமும் இல்லை.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நமது எரிசக்தி ராஜதந்திரத்தின் வெற்றியைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தியா, நிலையான எரிசக்தி இறக்குமதியை செய்து வருகிறது. நமது எரிசக்தித் துறை இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு முன்கூட்டியே நன்கு தயாராக இருந்ததாலும், இந்தியா இந்தச் சவால்களைச் சமாளிக்க முடிந்தது.
உலகின் பல பகுதிகள் எரிசக்தி நெருக்கடிகளையும் விலை அதிர்ச்சிகளையும் சந்தித்தபோது, இந்திய பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் முழுமையாகக் கிடைத்தது, சிலிண்டர்கள் தொடர்ந்து வீடுகளைச் சென்றடைந்தன, மேலும் சில்லறை எரிபொருள் விலைகள் கட்டுக்குள் இருந்தன. இந்திய எரிசக்தி நுகர்வோர் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டனர்.
இந்தியா தனது தற்போதைய திறன்களையும் கொள்ளளவுகளையும் விரிவுபடுத்துவதன் மூலமும், எதிர்காலத்திற்கான மாற்றுப் பசுமை எரிபொருட்களை ஏற்றுக்கொள்வதன் மூலமும் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்தி வருகிறது. பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் திட்டமானது நமது விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை வழங்குகிறது. நமது எரிசக்தி துறையில் இறக்குமதி செலவுகளை குறைக்கிறது. இவ்வாறு ஹர்தீப் சிங் பூரி கூறினார்.
