”விறுவிறுப்பான இஸ்ரேல் தேர்தல்”; உற்று நோக்கும் உலக நாடுகள்

மேற்காசிய நாடுகளில் ஒன்றான இஸ்ரேலில், இன்று (27-10-26) நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து வரும் அமெரிக்க மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக உலக நாடுகள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளன. இந்த போர் பதற்றத்தில் மிகவும் முக்கிய நாடாகப் பார்க்கப்படுவது இஸ்ரேல் ஆகும். எனவே, இந்த தேர்தல் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.  

இன்று (27-10-26) 26-வது இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான (கினசெட்) வாக்குப்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி, காலை 10:30 மணிக்குத் தொடங்கிய இந்த வாக்குப்பதிவு, இரவு 10:00 மணி வரை நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 120 நாடாளுமன்ற இடங்களுக்காக 36 கட்சிகள் களத்தில் போட்டியிடுகின்றன. அங்கு சுமார் 73 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 

இந்த தேர்தலைப் பொறுத்தவரையில், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ‘லிகுட்’ கட்சித் தலைமையிலான வலதுசாரி கூட்டணிக்கும், முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்கோட்டின் ‘யாஷர்’ கட்சித் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவிவருவதாகக் கருத்துக்கணிப்புகள் வெளியாகின்றன. 

இந்த தேர்தலில் திருப்புமுனையாக, 1996-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக அதிகமான வாக்குகள்  பதிவாகி வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், வெளிநாடுகளில் வாழும் சுமார் 67,000 இஸ்ரேலியர்கள் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காகத் தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்பியுள்ளனர்.

இந்த தேர்தலின் இறுதி முடிவுகள் அதிகாரப்பூர்வமாக நவம்பர் 4-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. எனினும், எந்தவொரு கூட்டணிக்கும் பெரும்பான்மைக்குத் தேவையான 61 இடங்கள் கிடைப்பதில் இழுபறி நீடிக்கலாம் எனத் தேர்தல் முந்தைய கணிப்புகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த தேர்தலின் வெற்றி தோல்விகள், ஈரான் மீதான போர் குறித்த விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், உலக நாடுகள் இந்த தேர்தலை உற்று நோக்குகின்றன.