“சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடியது எப்படி? – சிறைத்துறை விளக்கம்!

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் இரவு நேரத்தில் தப்பி ஓடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 5 பேர் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை  போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தேனி மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கி உள்ளது. கைதிகள் தப்பியோடியது எப்படி என சிறைத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், “தேனி மாவட்டச் சிறைச்சாலையானது 10.012019 முதல் தேக்கம்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இச்சிறைச்சாலையின் அங்கீகரிக்கப்பட்ட கைதிகள் தங்கும் கொள்ளளவு 200 ஆகும். 26.10.2026 அன்று, இச்சிறைச்சாலையில் மொத்தம் 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். 

இரவு சுமார் 10.00 மணியளவில், மூன்றாவது பிளாக்கில் உள்ள ஒரு கைதிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளதாகக் கூறி சில கைதிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து, மூன்றாவது பிளாக்கின் பாரா காவலராகப் பணியாற்றிய ஸ்டாலின் பிரபு (இரண்டாம் நிலைக் காவலர் எண். 15). அந்தக் கைதிக்கு எதேனும் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக உள்ளே சென்றார். அப்போது, கைதிகள் அவரைத் தாக்கி நிலைகுலையச் செய்து, சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களின் முயற்சியை பிரதான நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இருப்பினும், கைதிகள் காவலர்களைத் தாக்கி, சாவிகளைப் பறித்து, பிரதான நுழைவாயிலைத் திறந்து கொண்டு தப்பிச் சென்றனர்.

தப்பிச் சென்ற 17 கைதிகளின் விவரங்கள் பின்வருமாறு : 

1 லிங்கபிரசாத், த/பெ ஜெகநாதமூர்த்தி
2. சோலை முகிலேஸ்வரன், த/பெ நாகலிங்கம்
3. ராஜா சிக்கந்தர்,த/பெ.அப்துல் ரசாக்
4. மீனாட்சிசுந்தரம். த/பெ கருப்பண்ணன்
5. சிலம்பரசன், த/பெ செல்வகுமார்
6.கருப்பசாமி, த/பெமுருகன்
7. சபரிநாதன், த/பெ பழனிசுந்தரம்
8. பொன்முத்துசெல்வம். த/பெ பொன்னுசாமி
9. நிஷாந்த்,த/பெ காந்தி
10. பிரவீன்குமார். த/பெ தமிழ்ச்செல்வன்
11 முத்துஇளங்கோவன், த/பெ முருகன்
12 ரெஜின், த/பெரவி
13.தருண்குமார். த/பெ சின்னர்
14. திருப்பதி த/பெ கருப்பண்ணன்
15. ராஜ்குமார்.த/பெகலைஅரசன்
16. பாண்டிச்செல்வம். த/பெ சக்திவேல்
17. கார்த்திக்ராஜா,த/பெ நாகராஜ்

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பிரவீன்குமார், சிலம்பரசன், ராஜா சிக்கந்தர், ராஜ்குமார், மற்றும் லிங்கபிரசாத் ஆகிய 5 கைதிகள் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 12 கைதிகளைக் கைது செய்வதற்காகத் தமிழ்நாடு காவல்துறை தீவிரத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக, பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் கண்டமனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பணியில் கவனக்குறைவாக இருந்ததற்காக தேனி மாவட்டச் சிறைச்சாலையைச் சேர்ந்த 9 சிறைப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பான நிலைமையை ஆய்வு செய்வதற்காக சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைத் தலைவர் ஆர். கனகராஜ், மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் எ. முருகேசன், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆர். கிருஷ்ணராஜ், மதுரை தெற்கு மண்டல காவல்துறைத் தலைவர் விஜயேந்திரா பிதாரி, மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் அபினவ்குமார் மற்றும் தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம், ஆகியோர் தேனி மாவட்டச் சிறைச்சாலைக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.