தேனி: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற சட்டம் ஒழுங்கு பிரச்சனை முக்கிய காரணமாகும். பொது இடங்களில் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. ஆனால் சிறையில் உள்ள கைதிகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் காவல்துறை உள்ளது. தேனி, தேக்கம்பட்டி சிறையில் நேற்று இரவு 17 விசாரணை கைதிகள், காவலர்களை தப்பிவிட்டு சென்றனர். இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் 13 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை பொருள் புழக்கம் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. திமுக ஆட்சியை விட மோசமான சூழல் ஏற்பட்டு வருகிறது. பெண்கள் பாதுகாப்புக்காக சிங்க பெண்கள் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. ஆனால் சிங்க பெண்கள் படைக்கு தனி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டி மாவட்ட சிறை உள்ளது. நேற்று இரவு 10.30 மணிக்கு வலிப்பு நோய் வந்ததாக கைதிகள் நடித்தனர். 4 காவலர்களை தாக்கிவிட்ட 17 விசாரணை கைதிகள் தப்பினர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தப்பியோடியவர்கள் கைது செய்ய 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நக்சல் சிறப்பு பிரிவினரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ள மலை பகுதிகளில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டது. தாக்குதலுக்குள்ளான காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழக கேரள எல்லை குமிழி, கம்பம், போடிமெட்டு பகுதியிலும் தேடுதல் பணி நடந்து வருகிறது. சிறை வளாகத்திற்கு பின்னால் உள்ள காட்டு பகுதியில் மதுரை பெருங்குடியை சேர்ந்த பிரவீன் என்கிற கைதி பிடிப்பட்டார். தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவரை தனிப்படை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இதேபோல மதுரையை சேர்ந்த ராஜ்குமார், ராஜா சிக்கந்தர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “தப்பியோடிய 17 கைதிகளும் ஒரே பிளாக்கில் இருந்தனர். இவர்களில் 15 பேர் மதுரையை சேர்ந்தவர்கள். இவர்கள் திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டனர். மாலை 6 மணிக்கு மேல் 4 காவலர்கள் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். 17 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 4 பேர் மட்டுமே பணியில் இருந்தனர். இதை நீண்ட நாட்களாக திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளனர். மீதியுள்ளவர்களை விரைவில் கைது செய்வோம். இதுவரை 4 பேர் பிடிபட்டுள்ளனர்.” என்று கூறினர்.
கைதிகள் தப்பியோடிய சம்பவத்தில் தற்போது மேலும் ஒருவரை தனிப்படை போலீஸார் பிடித்துள்ளனர். 4 கைதிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மாற்றுத் திறனாளியான லிங்கபிரசாத் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறையில் இருந்து தப்பிய மாற்றுத் திறனாளியான லிங்கபிரசாத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு முத்துக்காளை என்பவருடைய ஆட்டோவில் ஏறி கண்டமனூர் விலக்கில் இறக்கிவிட கேட்டுள்ளார். அப்போது, சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் ஆட்டோவின் பின்னாலேயே பைக்கில் சென்று கைதியை பிடிக்க முயன்றுள்ளார்.
போலீஸாரின் சத்தம் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் உடனடியாக ஆட்டோவை நிறுத்தி லிங்கபிரசாத்தை பிடித்துள்ளார். பின்னர், தப்பியோடிய கைதி என்பதை காவலர் உறுதி செய்ததையடுத்து ஆட்டோ ஓட்டுநர் அவரை சிறைவாசலில் கொண்டு வந்து ஒப்படைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தேனி சிறையில் இருந்து தப்பிய மேலும் 8 கைதிகளை ட்ரோன் மூலம் கண்காணித்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கைதானவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. மாயமான 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
