“100 முறை என்ன… 1000 முறைக் கூட சொல்வேன்” – விமர்சனங்களுக்கு ராஷ்மிகா பதிலடி

நட்சத்திர தம்பதிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இந்தியில் ‘காஃபி வித் கரண் சீசன் 9’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் தங்களது காதல் குறித்தும் திருமணம் குறித்தும் மனம் திறந்து பேசியிருந்தனர். அப்போது ராஷ்மிகா, முதலில் தான் தான் விஜய் தேவரகொண்டாவிடம் திருமண விருப்பத்தை தெரிவித்ததாகவும் அதற்கு விஜய் தேவரகொண்டா தன்னிடம் 100 முறை புரொபோஸ் செய்ய சொன்னதாகவும் நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார். இதனால் விஜய் தேவரகொண்டா ஆணாதிக்க மனநிலையில் இருப்பதாக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தது. 

இந்த விமர்சனத்துக்கு தற்போது ராஷ்மிகா மந்தனா பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில், “பொதுவாக, இதுபோன்ற விஷயங்களுக்கு நான் பதிலளிப்பதில்லை. ஏனென்றால் ஒவ்வொருவரும் அவர்களின் கருத்தைச் சொல்ல உரிமை உண்டு. சில நேரங்களில், மற்றவர்களின் கருத்துகள் புதிய கோணத்தை புரிந்து கொள்ள உதவும். ஆனால், எங்கள் நேர்காணலைத் தொடர்ந்து இப்போது ஏற்பட்டுள்ள இந்த விமர்சனங்கள், ஏதோ ஒரு கருத்தைப் பகிர்ந்துகொள்வது போலத் தெரியவில்லை. மாறாக, யாரையாவது கடுமையாக திட்டி தங்கள் கோபத்தைத் தீர்த்துக்கொள்ளத் துடிக்கும் ஒரு கூட்டத்தின் செயல்பாட்டைப் போலத் தோன்றுகிறது.

இதனால் விஷயத்தின் உண்மையான சாராம்சம் தொலைந்து போய்விட்டது. ஆம், அந்த உரையாடல் நடந்தது உண்மைதான். ஆனால், நாங்கள் இருவரும் ஒரு பிரம்மாண்டமான ‘திருமண புரொபோஸலை’ எதிர்பார்க்கவில்லை. அந்த உரையாடலின் நோக்கம் என்னவென்றால், வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், மகிழ்ச்சிகள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியிலும், நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும், இது தேவையான வாழ்க்கைதானா என்பதையும், இதற்கான சரியான தருணம் இதுதானா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளவும் அவகாசம் எடுத்துக்கொள்வதுதான். நாங்கள் அதைச் செய்தோம், ஒருவரை ஒருவர் தேர்ந்தெடுத்துக்கொண்டோம்.

எங்களைப் பொறுத்தவரை, திருமணம் என்பது ஒரு ‘புரொபோசல்’ தருணத்தையோ, முட்டிப்போட்டு மோதிரம் அணிவிப்பதையோ குறிப்பதல்ல. வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் கட்டமைப்பதையே முக்கியமானதாக பார்க்கிறோம். நான் திருமணம் செய்துகொள்ளும் ஆணின் மீது காதல் இல்லையென்றால், பின் எதற்காக நான் அவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்? அவர் என் வாழ்நாள் முழுவதும் எனக்குத் துணையாக இருப்பார். சாதாரண நாட்களிலும், அசாதாரணமான நாட்களிலும் எனக்கு நண்பராக இருப்பார். என் குழந்தைகளுக்குத் தந்தையாக, என்னுடன் முதுமை வரை பயணிக்கும் மனிதராக இருப்பார். உங்களை எவ்வளவு அழகாக நேசிக்கிறார் என்றால், திருமணத்திற்குப் பிறகும் அவரிடம், நாம் திருமணம் செய்துகொள்ளலாமா? என்று கேட்கத் தோன்றும் ஒருவரைத் தேடிக்கொள்ளுங்கள். நான் ஆயிரம் முறை வேண்டுமானாலும் அவரைத் திருமணம் செய்துகொள்வேன், நூறு முறை என்பது மிகச் சிறிய எண்ணிக்கைதான். 

தங்கள் சொந்தக் கற்பனைக் கதைகளால் முற்றிலும் கண்மூடித்தனமாக இருப்பவர்களுக்குச் சொல்கிறேன்… நாங்கள் இருவரும் எங்கள் வாழ்க்கையை எங்கள் விருப்பப்படியும், எங்கள் சொந்தத் தேர்வுகள் மற்றும் கடின உழைப்பின் மூலமும் கட்டமைத்திருக்கிறோம். நாங்கள் இருவரும் அறிவுள்ளவர்கள், எப்படி வாழ வேண்டும், யாருடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரமும் பாக்கியமும் எங்களுக்கு உண்டு. என்னுடைய எல்லா காலகட்டங்களிலும் என்னுடன் இருந்தவர் விஜய் தேவரகொண்டா. 

பெண்ணியம் என்பது ஒருபோதும் மற்றவர்களைக் கீழே தள்ளிப் பேசுவதைப் பற்றியது அல்ல. அல்லது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவது அல்ல. நீங்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, முக்கியமானது என்னவென்றால், உங்கள் வாழ்க்கையை நீங்களே தேர்ந்தெடுத்து, அதன் பொறுப்பை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதற்கான சுதந்திரம் தான். நான் என் வாழ்க்கையின் பொறுப்பை என் கைகளில் எடுத்துக்கொண்டேன். அதற்குப் பரிசாக எனக்கு அளப்பரிய அன்பு கிடைத்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.